சென்னை – 8 நவம்பர், 2026 `முரசு’ புயலில் சிக்கி, உயிரிழந்த மற்றும் மாயமான சென்னை காசிமேடு, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று, அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து, கழக இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த முருகன், பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த குப்பன், காசிமேடு காசிபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, காசிமேடு N-4 அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், இராயபுரம் தொகுதி காசிமேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மோகன், திருவொற்றியூர் தொகுதி திருச்சினாங்குப்பம் மீனவக் குடியிருப்பைச் சேர்ந்த மாயமான ராஜேஷ் மற்றும் எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் ஆகிய எட்டு மீனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், அவர்களின் குடும்பத்தினருக்குக் கழகத்தின் சார்பில் நிதியுதவியும் வழங்கினார். மேலும், இத்துயரமான நேரத்தில் கழகம் அவர்களுக்குத் துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, மீனவர்கள் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களையும் அரசு உரிய முறையில் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், அரசின் அலட்சியப் போக்கே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கைகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அரசுத் தரப்பில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மீனவர்களுக்குப் போதிய காப்பீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், `மீனவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தனது பொறுப்பை உணர்ந்து புயல் மற்றும் பேரிடர் காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசின் அலட்சியத்தால், இனி ஒரு மீனவரின் உயிரும் பறிபோகக் கூடாது’ என்றும் தெரிவித்தார்.
`பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நியாயமான கோரிக்கைகளை, அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்திய அவர், இத்துயரமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கழகம் என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் உறுதியளித்தார்.
