கடலூர் – 8 நவம்பர், 2026 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டி குப்பம், நெய்வேலி சாலையில் செடுத்தான் குப்பம் பகுதியில் காசி அம்மாள் பயர் ஒர்க்ஸ் உள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு வாசலில் பட்டாசு கடை வைத்திருந்தனர். இந்த பட்டாசு கடையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. தீ அருகில் இருந்த குடோனுக்கு பரவியது. குடோனில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின.
இதில் பட்டாசு கடையில் விற்பனைக்காக பணியில் இருந்த சுகந்தி (40), பிரியதர்ஷினி (22) பிரவீன் ( 20 )உள்பட பட்டாசு வாங்க வந்த சுப்பிரமணியன் (50) கருணா மூர்த்தி (52),சக்கரபாணி (65)பிரிய தர்ஷினி (22),சுகந்தி (40),பிரவீன் (25),ரவி (25) ஆகியோர் உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். முத்தாண்டி குப்பம் நிலையதீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் பலலட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பொருட்கள் வெடித்து, கடை முழுவதும் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
