சென்னை – 8 நவம்பர், 2026 சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து, அதன் பேரில் பதிவு செய்திருந்த எட்டு வழக்குகளில், எதிரி ஜெம் வீரமணி 8 வழக்குகளிலும், எதிரி சாந்தி 3 வழக்குகளிலும், எதிரி மகேந்திரசிம்ஹன் 2 வழக்குகளிலும், எதிரி லாசர் 5 வழக்குகளிலும், எதிரி கணேசன் 2 வழக்குகளிலும், எதிரி சீனிவாசன், சக்திவேல், பாபு மற்றும் பார்த்திபன் ஆகியோர்கள் தலா 1 வழக்கிலும் கைது செய்யப்பட்டு அனைவரும் சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வழக்கில், சாட்சியாக இருந்த ஒரு சிறுமி, தானும் எதிரி ஜெம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கொடுத்த வாக்குமூலத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிரி ஓட்டுநர் லாசரை ஒரு நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரித்து, அதன்பேரில் பாலியல் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற Camry Car அடையாளம் காணப்பட்டு, வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்ற எண்-11/2026 வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு லட்சம்) நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க, கனம் போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மொத்தம் பதிவான எட்டு வழக்குகளில், இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கை வரும் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
