சென்னை – 8 நவம்பர், 2026 கோவாவில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, 'வேவ்ஸ் பஜார்' கண்காட்சியில் வேவ்ஸ் எக்ஸ் என்ற புத்தொழில் நிறுவனங்களின் அரங்கு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்கத் திரைப்படம், அது சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் நிறுவனங்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
திரைப்படம், ஊடகம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், தீர்வுகள் ஆகியவற்றைச் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தவும், உலக அளவில் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி வாய்ப்பளிக்கும்.
உள்நாட்டு தொழில் மேம்பாட்டு துறையான டிபிஐஐடி-யில் பதிவு செய்துள்ள தகுதியான புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். வேவ்ஸ் எக்ஸ் அமைக்கும் தேர்வுக்குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து நிறுவனங்களைத் தேர்வு செய்யும்.
வேவ்ஸ் எக்ஸ் என்பது ஊடக, பொழுதுபோக்குத் துறையில் புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புத்தொழில் மேம்பாடு, தொழில் பாதுகாப்புத் திட்டமாகும்.
