சென்னை – 15 நவம்பர், 2026 இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உலக நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இத்தாலியில் வசிக்கும் இந்திய மாணவர்கள், பெண்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இளைஞர்களிடையே நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். உணவுப் பழக்கத்தில் மாற்றம், முறையான உடற்பயிற்சி, உடல் பருமனைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை நோயைத் தடுப்பதற்கான அடிப்படை வழிகள் என அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிக்கப் புதிய வகை மருந்துகள் வந்தாலும், வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதுமே முக்கியம் என்று அவர் கூறினார். இந்த ஆண்டின் உலக நீரிழிவு தினக் கருப்பொருளான ' நீரிழிவு நோய்க்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை ' (Early Action on Diabetes) என்பது நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிதல், உடனடிச் சிகிச்சை அளித்தல், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
