சென்னை – 15 நவம்பர், 2026 கோவாவில் நடைபெறவுள்ள 57- வது சர்வதேச திரைப்பட விழா 2026- ல், பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஜனநாயகம், சுதந்திரம், அடையாளம், வரலாறு, சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இத்திரைப்படங்கள், பல்வேறு நாடுகளின் வாழ்க்கைச் சூழல்களையும் மக்களின் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன.
பிரேசிலின் ‘அமடியோ அண்ட் தி ஹைப்போதெட்டிக்கல் நியூ வேர்ல்டு’ திரைப்படம், அடிமைகளை விடுவிக்கும் போராட்டத்தில் பங்காற்றும் ஆப்பிரிக்கக் கண்டுபிடிப்பாளரைப் பற்றியது. இந்தோனேசியாவின் ‘தி சீ ஸ்பீக்ஸ் ஹிஸ் நேம்’ திரைப்படம், 1998- ம் ஆண்டு ஜனநாயகப் போராட்டத்தின்போது காணாமல் போன மாணவர் குறித்ததாகும். தென்னாப்பிரிக்காவின் ‘தி ட்ரெக்’ காலனித்துவக் கொடுமைகளைப் பேசுகிறது.
ஈரானின் ‘பவுல்ட்ரி ஃபார்ம்’ காணாமல் போன நண்பனைத் தேடும் ஈராக் நாட்டுச் சிறுவனின் ஆபத்தான பயணத்தைக் காட்டுகிறது.
சவுதி அரேபியாவின் ‘ஹிஜ்ரா’, சீனாவின் ‘எம்பர்ஸ்’ போன்ற படங்கள் குடும்ப உறவுகள், இளைய தலைமுறையின் கனவுகள், பெண்களின் வாழ்க்கை, தனிப்பட்ட அடையாளம் ஆகியவற்றைப் பேசுகின்றன.
