சென்னை – 15 நவம்பர், 2026 ஜல் ஜீவன் திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடர்பான முதலாவது மண்டல மாநாடு, தமிழ்நாட்டின் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் அந்த மாநாடு நேற்று ( 2026 நவம்பர் 13) நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கிராமப்புறங்களில் நிலையான குடிநீர் சேவையை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறைச் செயலர் அசோக் கே.கே. மீனா தலைமையில், ஐந்து குழுக்கள் ஐந்து கிராமங்களில் குடிநீர் கட்டமைப்புகளைப் பார்வையிட்டன. பின்னர் பழமானேரி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, குடிநீர் கட்டமைப்பை ஊராட்சியிடம் அவர்கள் ஒப்படைத்தனர். மரக்கன்றுகளும் நடப்பட்டன. வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதால் ஏற்பட்டுள்ள நன்மைகளை கிராம மக்கள் விளக்கினர்.
மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய ஜல்சக்தி்த் துறைச் செயலாளர் மீனா, வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதைக் கடந்து, 24 மணி நேரமும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஊராட்சிகளுக்குத் தொழில்நுட்ப உதவி, பயிற்சி, தொடர் வழிகாட்டுதல் அவசியம் என்றும், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் ஆகியவற்றுக்குத் திட்டமிட நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் 2026- ல் நடைபெற்ற துறைசார் மாநாட்டின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. முதல் நாள் மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல், நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். மாநாட்டின் முடிவுகள் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்து, மக்கள் பங்கேற்புடன் நீண்டகாலம் நம்பகமான குடிநீர் சேவையை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
