சேலம் – 8 நவம்பர், 2026 சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் உள்ள நூலகத் தெருவில் புறம்போக்கு நிலத்தை கொளத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலின் நிர்வாகம் ஆக்கிரமித்து இரும்பு மற்றும் சிமெண்டால் கிரில் அமைத்ததுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கோயிலின் தேரை வேறு இடத்துக்கு கொண்டுசெல்வது தொடர்பாக அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, கொளத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கோயிலின் பரம்பரை அறங்காவலர் கே.பி.என்.மகேஸ்வர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் விசாரித்தபோது, அப்பகுதியில் குடியிருக்கும் ஜெகதாம்பாள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.ராஜவேலாயுதம்,’’ மனுதாரர் மகேஸ்வர் கோவிலின் பரம்பரை அறங்காவலர் இல்லை. அதற்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை.
பொது வழிகள் தடுக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்ற உத்தரவை உறுதிசெய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘’ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பேரூராட்சி அனுப்பிய நோட்டீசில் எந்த தவறும் இல்லை. அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொது பயன்பாட்டில் உள்ள அரசு நத்தம் நிலங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து, அவற்றை அகற்றவேண்டும். இந்த பணிகளை 8 வாரங்களில் முடிக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி பரம்பரை அறங்காவலர் எனக் கூறி மகேஸ்வர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
