சென்னை – 7 நவம்பர், 2026 சென்னை, திருவொற்றியூர், கணக்கர் தெருவைச்சேர்ந்த ஜெயகுமார், வ/67, த/பெ.கண்ணாயிரம் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இவர் கடந்த 04.11.2026 தேரடி பஸ் ஸ்டாப் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் வேண்டுமென்றே மேற்படி முதியவர் ஜெயகுமாரை காலால் எட்டி உதைத்ததால் ஜெயகுமார் நிலைதடுமாறி நின்றதாகவும், பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுநர் அருகில் உள்ள மருத்துவமனை அருகே ஆட்களை கீழே இறக்கி கொண்டிருந்ததை பார்த்த ஜெயகுமார், அங்கு சென்று ஏன் என்னை காலால் எட்டி உதைத்தீர்கள் என கேட்டபோது ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஆட்டோவில் இருந்த 3 நபர்கள் மேற்படி ஜெயகுமாரை அவதூறாக பேசி கையால் தாக்கி கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனர். தாக்குதலில் காயமடைந்த ஜெயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று தன்னை தாக்கிய 3 நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.தினகரன், வ/34, சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர், சென்னை 2.லோகேஷ், வ/24, சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர், சென்னை 3.கார்த்திக் (எ) டேப் கார்த்திக், வ/28, சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர், சென்னை ஆகிய மூவரை நேற்று (05.11.2026) கைது செய்தனர்.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான கார்த்திக் (எ) டேப் கார்த்திக் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (05.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
