சென்னை – 26 நவம்பர், 2026 இன்றைக்கு புகார் மனு அளிப்பதற்காகச் சென்றபோது, டிஜிபி அவர்கள் 'சிங்கப்பெண் படை' பயிற்சி நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம், இந்தச் சிங்கப்பெண் படைக்கு என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள், அவர்களுடைய வேலை என்ன என்பதுதான். தமிழ்நாட்டு மக்களையும், பத்திரிகையாளர்களான உங்களையும் பார்த்துக் கேட்கிறேன்; சிங்கப்பெண் படையை எங்கேயாவது பார்த்திருப்பீர்களா? முதலமைச்சர் இதை ஒரு பெரிய சாதனையாக அறிவித்தார்; ஆனால், இந்த ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதைப் பத்திரிகையாளர்களான நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதை நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன்; ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் என்ன செய்தார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். நான் தரவுகளோடு (Database) பேசினேன்; எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன, எத்தனை பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை நடந்திருக்கின்றன எனச் சட்டமன்றத்தில் பல கேள்விகளைக் கேட்டேன். ஆனால் முதலமைச்சர் அன்றைக்கு எந்தப் பதிலும் சொல்லாமல், கிட்டத்தட்ட 50-60 வருடங்களுக்குப் பின்னால் டைம் டிராவல் செய்து, சம்பந்தமே இல்லாமல் பதில் சொன்னார். அதனுடைய விளைவு, இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் 75 சதவீதத்திற்கும் மேல் ஆளுங்கட்சியினுடைய நிர்வாகிகளே ஈடுபடுகிறார்கள். ஆளுங்கட்சி நிர்வாகிகள் என்றால் ஏதோ வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் அளவில் இல்லை; மாவட்டச் செயலாளர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரே இத்தகைய தவறான செயல்களிலும், வன்முறைகளிலும், பாலியல் வன்முறைகளிலும் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் குறித்துப் பேசியதற்கும் எந்தச் சரியான பதிலும் இல்லை. பல மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கட்சிக்கார மகளிரையே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடுமைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.
இதில் உச்சபட்சமாக, ஒரு பெண் அதிகாரிக்கு—மாவட்ட ஆட்சித் தலைவருக்கு—ஆளுங்கட்சியின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே இப்படி ஒரு கேவலமான விஷயம் எங்குமே நடந்தது கிடையாது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்குச் சட்டமன்ற உறுப்பினர் ஆபாச மெசேஜ் அனுப்புவதுடன், மது அருந்திவிட்டு அவருடைய முகாம் அலுவலகத்திற்கே (Camp Office) சென்று தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.
இவர்கள் மே 10-ஆம் தேதி ஆட்சிக்கு வந்த நிலையில், ஜூலை மாதமே இது நடந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் 'ஹனிமூன் பீரியட்' என்பதால் ஆறு மாதங்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று நாம் சொல்வதை, இந்தச் சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சரும் நேரடி அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டார்கள் போலும். ஜூலை 31-ஆம் தேதியிலிருந்தே இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து இதைப் பற்றிப் பத்திரிகையாளர்களும் சமூக வலைதளங்களிலும் எழுத ஆரம்பித்தார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள்தான் முதலில் இந்தச் செய்தியை வெளியே சொன்னார்.
ஆனால், பொய் சொல்வதற்கென்றே ஒரு அமைச்சரை வைத்திருக்கிறார்கள்; அவரிடம் பத்திரிகையாளர்கள் போய்க் கேட்டபோது சம்பந்தமே இல்லாமல் பொய் சொல்வதையே பழக்கமாகக் கொண்டவர் பதில் சொல்கிறார். 116 நாட்களுக்கு முன்பே அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அதற்குத் தலைமைச் செயலாளர், "நீ வேறு மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிக்கொண்டு போய்விடும்மா" என்று சொல்லியிருக்கிறார். இப்போதெல்லாம் தோண்டத் தோண்ட இந்த விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது கடந்த ஒரு மாதமாக அனைவரும் பேசி வருகிறோம்; ஆனால், இன்றுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று கூட நீதிமன்றத்திற்குச் சென்றதால்தான் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்வதற்கே 116 நாட்கள் ஆகியிருக்கிறது. 116 நாட்களாகச் சட்டம்-ஒழுங்கைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா என்பதைப் பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்களிடம் கேட்க விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், குற்றச்சாட்டு வெளியே வந்ததிலிருந்து 'வெர்ச்சுவல் வாரியர்ஸ்' எனப்படும் ஆன்லைன் அப்யூசர்கள் பாதிக்கப்பட்ட நபரையே தாக்கித் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.
நான் இன்று டிஜிபி அவர்களிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், ஜூலை 31-ஆம் தேதியே புகார் அளிக்கப்பட்டும் குற்றத்தை மூடிமறைக்க முயன்ற தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரையும் குற்றவாளியாகச் (Accused) சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன். தலைமைச் செயலாளர் இந்த விஷயத்தை முதலமைச்சரிடம் சொன்னாரா இல்லையா? சொல்லவில்லை என்றாலும் அது மிகப்பெரிய தவறு; சொல்லியிருந்தால் முதலமைச்சர் ஏன் 114 நாட்களாக இன்றுவரை வாய் திறக்காமல் இருக்கிறார்? ஒருவேளை அந்தச் சட்டமன்ற உறுப்பினரை அழைத்து "நீங்கள் செய்வது ஒழுங்கா?" என்று கேட்க முதலமைச்சருக்குப் பயமாக இருக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த அமைச்சர்கள் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அதேபோல, துணை சபாநாயகர் ரவிசங்கர் அவர்கள் தன் வீட்டிற்கு மனு கொடுக்க வந்தவரைக் கண்மூடித்தனமாக அடித்த வீடியோ வைரலானது. உடனே நள்ளிரவில் அவரை அழைத்து, அடிபட்டது தெரியாதபடி மேக்கப் போட்டு அருகில் அமர வைத்து, இருவரும் நண்பர்கள் போலச் சிரித்துப் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்கள். அதன் பிறகு இரண்டு மூன்று மணி நேரத்தில் மீண்டும் அந்த நபர், "என்னை அழைத்து மிரட்டி வீடியோ எடுத்துவிட்டார்கள்; துணை சபாநாயகர் அடித்தது உண்மைதான்" என்று பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தச் சம்பவம் நடந்து 16 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, துணை சபாநாயகர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளோம்.
116 நாட்களாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தூங்குமூஞ்சி அரசும், முதலமைச்சரும் விழித்தெழுந்து சட்டம்-ஒழுங்கைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக இவர்கள் அனைவரும் குற்றத்தை மறைக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதால், இந்த அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் எங்களுக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கைத் தானாக முன்வந்து சிபிஐ-யிடம் (CBI) ஒப்படைக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட எம்எல்ஏவையும் துணை சபாநாயகரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அரசு மாறினாலும் அரசு அதிகாரிகள் திமுக ஆதரவாக இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் புனையப்படுகின்றன என்று சமூக வலைதளங்களில் தவெக-வினர் சொல்வதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டை விடுங்கள், இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, குடித்துவிட்டு முகாம் அலுவலகத்தில் கலாட்டா செய்த சம்பவம் எந்த ஆட்சியிலாவது நடந்திருக்கிறதா? "பெரிய மாற்றம் கொண்டு வருகிறோம்" என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள்? இதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா? 'துர்நாற்றம்' என்று தமிழ்நாட்டு மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீதும், பெண் மாவட்டத் திட்ட இயக்குநரை மிரட்டியதாக ஒரு புகார் உள்ளது; அதேபோல அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகி ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய புகாரும் உள்ளது; திமுகவினரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தவெக-வினர் மறுப்பு வைக்கிறார்கள். ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் விஷயத்தில், அவருடைய தொகுதியில் காலை உணவுத் திட்டத்தில் சமைக்கும் ஒடுக்கப்பட்ட பெண் பணியாளர் ஒருவரை அந்த பிடிஓ (BDO) அதிகாரி திட்டியிருக்கிறார். அந்தப் பணியாளர் எம்எல்ஏவிடம் முறையிட்டபோது, வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் அந்த அதிகாரிக்கு போன் செய்து, "ஏன்மா இப்படித் திட்டுகிறீர்கள், கொஞ்சம் நன்றாக வேலை வாங்குங்கள், திட்டாதீர்கள்" என்று ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தன் கடமையைத்தான் செய்திருக்கிறார். ஆனால், ஒரு எம்எல்ஏ என்றுகூடப் பார்க்காமல் அந்த அதிகாரி தவறாகப் பேசியதால், வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த அதிகாரி எல்லோரிடமும் அப்படித்தான் பேசுவதாகக் கூறி, வசந்தம் கார்த்திகேயன் மட்டுமல்லாமல் விமலா, புவனேஸ்வரி, சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரும் அந்த பிடிஓ மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். எனவே, வசந்தம் கார்த்திகேயன் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க இந்த அரசு நினைக்கிறது.
நீங்கள் கேட்ட அந்த ஆஷிக் என்பவர் இளைஞரணி நிர்வாகிதான். அந்தப் புகார் வந்தவுடனே நாங்களும் விசாரித்தோம். இப்போது புகார் கொடுத்துள்ள அந்தப் பெண்மணி தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆஷிக் அவர்களே கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருக்கிறார்; ஆனால் காவல்துறை அதைக் கண்டுகொள்ளவும் இல்லை, விசாரிக்கவும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி மீது ஒரு குற்றச்சாட்டு என்றவுடனே அதைப் பெரிதாக ஊதி, தங்கள் தவறிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இப்போதும் காவல்துறை அவர்களிடம்தானே இருக்கிறது? சரியான ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கைது நடவடிக்கை இருக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைக்கிறது; தமிழ்நாட்டு மக்களும் அது நடக்கும் என்று நம்புகிறார்கள். முதலமைச்சர் தயவுசெய்து தூக்கத்திலிருந்து எழுந்து இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.
