சென்னை – 2 நவம்பர், 2026 நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரைக்கு வரும் நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். 2D என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ஜித்து மாதவன் வித்தியாசமான கதை மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
நடிகர் கார்த்தி, சூர்யாவின் நடிப்பையும் ஜித்து மாதவனின் தனித்துவமான இயக்கத்தையும் பாராட்டினார். நடிகை நஸ்ரியா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். நடிகர் நஸ்லெனுக்கும் இது முதல் தமிழ்ப் படமாகும்.
நடிகர் சூர்யா பேசுகையில், ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இயக்குநர் ஜித்து மாதவனின் வித்தியாசமான படைப்புலகம் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார். ரசிகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு வந்து படத்தை ரசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நகைச்சுவை, ஆக்ஷன், திரில்லர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
