சேலம் – 8 நவம்பர், 2026 சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று தொழில் துறையினர் தீவிர வலியுறுத்தல் விடுத்துள்ளனர். சேலம் அடுத்த கமலாபுரத்தில் 136 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விமான நிலையம், 1,800 மீட்டர் நீள ஓடுபாதையுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக ஏடிஆர் மற்றும் பாம்பார்டியர் விமானங்கள் மட்டுமே தரை இறங்க முடியும்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் 2018ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அடுத்தடுத்து முடங்கின. இதையடுத்து முதல் கட்ட விரிவாக்கப் பணிக்காக 2025ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி 206.17 ஏக்கர் நிலத்தை ரூ.364.85 கோடி மதிப்பீட்டில் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் நில உரிமையாளர்களின் தொடர் பிரச்னை காரணமாக நிலத்தை ஒப்படைக்கும் பணிகள் இன்னமும் முடிவடையாமல் தேக்கமடைந்துள்ளது.
இந்த சூழலில் விமான நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் சேலம் மண்டல தலைவர் பூபாலன் கூறும்போது, ‘விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் கூடுதல் விமானங்களை இயக்கவும், முக்கிய வர்த்தக நகரங்களுக்கான இணைப்பை மீண்டும் பெறவும் முடியும்; 2035ம் ஆண்டிற்குள் சேலத்தை உலகத்தரம் வாய்ந்த தொழிற்துறை மையமாக மாற்ற இந்த திட்டம் மிகவும் அவசியமானது’ என்று கூறினார். இதற்கிடையே ரூ.50 கோடி செலவில் முனைய கட்டிடத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய இயக்குனர் நவுஷாத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘விமான நிலைய விரிவாக்கத்திற்கு முதலில் 170 ஏக்கர் நிலம் கோரப்பட்ட நிலையில், அரசு சுமார் 210 ஏக்கர் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டும் இதுவரை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்படவில்லை; ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் மீண்டும் விமான சேவையை தொடங்க வாய்ப்புள்ளது’ என்று கூறினார். எனவே நிலத்தை விரைந்து ஒப்படைத்து விமான நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
