சென்னை – 3 நவம்பர், 2026 சென்னை வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி நெடுஞ்சாலை ஓரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வட மற்றும் தென்மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகளும் வந்து செல்கின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று காலை 6வது நடைமேடை மற்றும் 7வது நடைமேடையில் அரசு பேருந்துக்கு காத்திருந்த ஏராளமான பயணிகளை, திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிரைவர்கள் போட்டி போட்டு அழைத்தனர். இதனால் இருதரப்பு அரசு பேருந்து டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு மற்றும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர் சக அரசு பேருந்து டிரைவர்கள் ஓடிவந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
