சென்னை – 1 நவம்பர், 2026 பிரதமர் மோடிக்காக நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கர்வா சவுத் விரத பூஜை செய்ததாக இணையத்தில் பரவிய வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை விபரம் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், பிரதமர் மோடி மீது தீவிர பற்று கொண்டவராக அறியப்பட்டு வரும் நிலையில், கணவனின் நீண்ட ஆயுளுக்காக இந்து பெண்கள் மேற்கொள்ளும் ‘கர்வா சவுத்’ விரத பூஜையை அவர் பிரதமர் மோடிக்காக கடைப்பிடித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி கடுமையான கேலி கிண்டல்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளானது.
இந்த அபாண்டமான அவதூறு பரவிய நிலையில் நடத்தப்பட்ட உண்மை சரிபார்ப்பில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கணேஷ் கோயில் மற்றும் சாமுண்டா மாதா கோயிலில் கடந்த ஜூன் 11ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் கங்கனா ரணாவத் வழிபாடு நடத்திய பழைய வீடியோவை எடுத்து விஷமிகள் சிலர் வதந்தியைப் பரப்பியது தெரியவந்துள்ளது.
ஒன்றிய அரசில் பிரதமர் மோடி அதிகாரத்தில் 12 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, ‘நாட்டு மக்களை தொடர்ந்து வழிநடத்த பிரதமர் மோடி மேலும் வலிமை பெற வேண்டும்’ என்று கூறி அப்போது கங்கனா நடத்திய சிறப்பு வழிபாட்டுக் காட்சிகளை வெட்டி எடுத்து, கர்வா சவுத் நாளில் திட்டமிட்டு அவதூறு பரப்பிய இணையதள விஷமிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோ குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
