தில்லி – 12 நவம்பர், 2026 புதுதில்லி வடக்கு மற்றும் தெற்கு வளாகத்தில் யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த அருங்காட்சியகம் அமைக்க ரூ.3,230 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நாகரீக பாரம்பரியம், பன்முகத்தன்மை, வளம், கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் தெற்கு வளாகப் பகுதிகளின் தனித்துவமிக்க கட்டடக் கலையையும், பாரம்பரியமிக்க முக்கியத்துவத்தையும் சிதைக்காமல் மக்களுக்கான கலாச்சார மையமாக மாற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட உள்ளது.
1,78,509 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகம் சிறந்த அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பங்கள், பார்வையாளர்களை மையமாகக் கொண்ட செயல்விளக்க நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற முக்கிய அருங்காட்சியகங்களுக்கு இணையாக இந்த யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. இது உலகின் மிகப்பெரிய காட்சியகத்தைக் கொண்ட அருங்காட்சியகமாகத் திகழும்.
இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் நாகரீகம் குறித்த கருப்பொருளுடன் கூடிய காட்சியகங்கள், கண்காட்சிகள், பல்வேறு கலாச்சார மரபுகள், அறிவுசார் அமைப்புகள், கலை, பண்பாட்டு நடைமுறைகள், பாரம்பரியம் குறித்த விளக்கங்களை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்படும்.
இந்த அருங்காட்சியம் அமைக்கும் திட்டத்தில் காட்சியகங்களை உருவாக்குதல், பல்வேறு கலைப்பொருட்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, சிறந்த அனுபவங்களை வழங்கும் அம்சங்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பு, நவீன கட்டிட மேலாண்மை அமைப்புகள், அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அடங்கும்.
திட்டமிடல், பாரம்பரிய பாதுகாப்பு, கண்காட்சி வடிவமைப்பு, நீடித்த கலாச்சார மேலாண்மை போன்ற அம்சங்களில் சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார சூழலுக்கு ஏற்ப இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்படுகிறது.
