hello madras mobile banner 1200x300

குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வங்கிகள் ஆதரவு அளிக்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

சென்னை – 12 நவம்பர், 2026 தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 105-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வங்கியின் 105 ஆண்டு கால குறிப்பிடத்தக்க பயணத்திற்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். 1921-ம் ஆண்டு நாடார் வங்கி நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர் நாட்டின் வங்கித்துறைக்கு அந்த வங்கி ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார். எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கி 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 632 கிளைகளுடன் முக்கிய வங்கியாக வளர்ச்சியடைந்துள்ளதாக கூறினார். தற்போது இந்த வங்கி 53 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதுடன் ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவிற்கு வணிகம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டை கட்டமைப்பதில் வங்கிகளின் முக்கிய பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய அவர், பொறுப்புமிக்க கடன் அளித்தல், குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், தொழில்முனைவோர்கள், மகளிர் தலைமையிலான நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஆதரவை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் குறித்து பேசிய குடியரசு துணைத்தலைவர் 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் வங்கித்துறை முக்கியப் பங்கு வகிப்பதாக கூறினார். டிஜிட்டல் வங்கி, யுபிஐ மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் நிதி உள்ளடக்கம் விரிவடைந்ததன் காரணமாக பெருமளவிலான மக்கள் முறையான வங்கிச்சேவைகளை பெற முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் செயல்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றை பாராட்டிய அவர் இணைய பாதுகாப்பை தொடர்ந்து வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் பணம், தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தினார்.

Read the full e-paper

Translate »