சென்னை – 13 நவம்பர், 2026 பலதரப்பு ஒத்துழைப்பு மூலம் பருவநிலை நடவடிக்கைகளை இந்தியா உறுதியுடன் மேற்கொண்டு வருகிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
துருக்கியின் அன்டாலியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், எஃகு, சிமெண்ட், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள், கல்விசார் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புதுதில்லியில் இன்று ( 2026 நவம்பர் 12) கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்தில் தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைக் குழுவின் (லீட்ஐடி) இந்திய உறுப்பினர் நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், செயில், அல்ட்ராடெக் சிமெண்ட், வால்வோ குழுமம், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களும், சென்னை, மும்பை, காரக்பூர், ஹைதராபாத், புவனேஸ்வர், தன்பாத் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் (ஐஐடி) பங்கேற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பூபேந்தர் யாதவ், அரசு, தொழில்துறை, கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியே இந்தியாவின் பருவநிலை நடவடிக்கைகளின் அடித்தளமாக உள்ளது என்று குறிப்பிட்டார். லீட்ஐடி 3.0 தளம் பருவநிலை இலக்குகளைச் செயல்வடிவத்திற்குக் கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார். 2019- ம் ஆண்டில் இந்தியா, ஸ்வீடன் அரசுகளால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் தற்போது 19 நாடுகளும், 33 நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளன. இதன் மூன்றாம் கட்டமான லீட்ஐடி 3.0 திட்டத்தை பூபேந்தர் யாதவ், ஸ்வீடன் பருவநிலை அமைச்சகத்துடன் இணைந்து 2026 நவம்பர் 17 அன்று அன்டாலியாவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
