சென்னை – 2 நவம்பர், 2026 பீகார் சட்ட மேலவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை வீழ்த்திய 2 சுயேச்சை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததால் ஆளும் கூட்டணியில் பெரும் மோதல் வெடித்துள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், அங்கு சமீபத்தில் 2 சட்ட மேலவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சரண் ஆசிரியர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஆனந்த் புஷ்கரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராகுல் ராஜ் வெற்றி பெற்றார். இதேபோல் திர்கத் பட்டதாரி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அபிஷேக் ஜாவை தோற்கடித்து சுயேச்சை வேட்பாளர் பன்ஷிதர் பிரிஜ்வாசி வெற்றி வாகை சூடினார். இவ்வாறு ஆளும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வீழ்த்திய இந்த 2 சுயேச்சை உறுப்பினர்களும், முதல்வர் சாம்ராட் சவுத்ரியை நேரில் சந்தித்து நேற்று முறைப்படி பாஜகவில் ஐக்கியமாகினர்.
இந்த விவகாரம் ஆளும் கூட்டணியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களத்தில் கூட்டணி தர்மத்தை பாஜக தலைவர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டதாக ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஆனந்த் புஷ்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘பாஜக தலைவர்கள் தங்களுக்கு வாக்கு சேகரிக்கும் போது மட்டும் தான் கூட்டணி தர்மம் நினைவுக்கு வருமா? எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தேவைப்படும் போது அந்த உறுதிப்பாடு எங்கே போனது? சரண் தொகுதியில் பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் மோதிகாரி தொகுதி பாஜக எம்.பி. ராதா மோகன் சிங் ஆகியோர் கூட்டணி வேட்பாளருக்காக முறையாக களப்பணியாற்றவில்லை. சுயேச்சை வேட்பாளரை வாபஸ் பெற வைப்பதாக அளித்த வாக்குறுதியையும் பாஜகவினர் காப்பாற்றாமல் துரோகம் இழைத்து விட்டனர்’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவை பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டே புறக்கணித்ததாகவும், இதன் பின்னணியில் முன்கூட்டியே வகுக்கப்பட்ட அரசியல் சதி இருப்பதாகவும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதே சமயம், முதல்வர் நிதிஷ்குமாரின் தலைமையின் கீழ் தொடர்ந்து விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என உறுதியளித்த ஆனந்த் புஷ்கர், களத்தில் உழைக்கும் அடிமட்ட கூட்டணி தொண்டர்களின் அர்ப்பணிப்புக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் மரியாதை உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணி வேட்பாளர்களை தோற்கடித்த 2 சுயேச்சைகளை பாஜக உடனடியாக தன்பக்கம் இழுத்துள்ள இந்த நடவடிக்கை, பீகார் ஆளும் கூட்டணியில் பெரும் விரிசலையும் அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது.
