hello madras mobile banner 1200x300

இந்தியா-இத்தாலி இடையே அறிவியல் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

சென்னை – 14 நவம்பர், 2026 இந்தியா-இத்தாலி இடையே நீண்டகால அறிவியல் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இருதரப்பு அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் கூட்டு ஆராய்ச்சி, புத்தாக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும், மத்திய அறிவியல் & தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இத்தாலியின் பல்கலைக்கழக, ஆராய்ச்சித் துறை அமைச்சர் அன்னா மரியா பெர்னினியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-இத்தாலி உத்திசார் கூட்டாண்மையை அறிவியல் துறை ஒத்துழைப்பு நடவடிக்கைகளாக மாற்றுவது, நிறுவன ரீதியான வழிமுறைகளை வலுப்படுத்துவது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்து இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

2023-ம் ஆண்டில் இருநாட்டு உறவுகள் உத்திசார் கூட்டாண்மை என்ற நிலையை அடைந்ததே தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் 2024 நவம்பரில் 2025-2029-ம் ஆண்டுகளுக்கான கூட்டு உத்திசார் செயல் திட்டத்தை அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக 2025 ஏப்ரல் மாதம் இத்தாலி குழு புதுதில்லி வந்தபோது, மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும், இத்தாலி பல்கலைக்கழக, ஆராய்ச்சி அமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக, 2027-ம் ஆண்டில் புதிய கூட்டு ஆராய்ச்சிக்கான அழைப்பை வெளியிட இரு தரப்பும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு, உயர்திறன் கணினி, தரவு, தூய்மைத் தொழில்நுட்பம், ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மேம்பட்ட உயிரி தொழில்நுட்பம், மரபணு சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் இந்தக் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. நவம்பர் 11 முதல் 15 வரை டாக்டர் ஜிதேந்திர சிங் மேற்கொண்டுள்ள இத்தாலிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

Read the full e-paper

Translate »