சென்னை – 16 நவம்பர், 2026 சிறந்த எதிர்காலத்தைத் தேடி தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் மக்களின் துயரங்கள், சமூகங்களை அச்சுறுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போப் லியோ XIV தெரிவித்தார். பெரு நாட்டில் தாம் முன்பு மறைமாவட்டப் பொறுப்பில் இருந்த பகுதியில் அமைந்துள்ள, ஆண்டீஸ் மலைத்தொடரின் தொலைதூரக் கிராமத்துக்குச் சென்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு பெருவின் ஆண்டீஸ் மலைப்பகுதியின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள சான்டா குரூஸ் டி சுக்சபாம்பா கிராமத்தில் சுமார் 6,000 பேர் வசிக்கின்றனர். இருப்பினும், போப்பின் வருகையையொட்டி சுமார் 20,000 பேர் திரண்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
திறந்தவெளியில் நடைபெற்ற திருப்பலியில் உரையாற்றிய போப், கிராமங்களின் மக்கள் தொகையைக் குறைத்து வரும் பிறப்பு விகிதச் சரிவு மற்றும் நிலத்தின் வளங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாத நிலை ஆகியவை குறித்துப் பேசினார்.
அந்தக் கிராமம் அமைந்துள்ள கஜமார்கா பிராந்தியத்தின் மக்கள்தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர். பெருவிலேயே அதிக வறுமை நிலவும் பகுதி இதுவாகும் என்று அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு இடம்பெயர்வால் அதிக எண்ணிக்கையிலான மக்களை இழந்துள்ளதும் கஜமார்கா பிராந்தியம்தான். அங்கு பிறந்த 7,29,000 பேர் தற்போது பெருவின் பிற பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
தம்மைக் காண்பதற்காகப் பயணம் மேற்கொண்ட அனைவருக்கும் தனது மறையுரையில் நன்றி தெரிவித்த போப், வாழ்க்கையின் சிரமங்கள் எத்தகையதாக இருந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
