மதுரவாயல் பகுதியில் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு
சென்று தகராறு செய்து தாக்கிய நபர் கைது.
நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்
ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த ரமணன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த
மே மாதம் இருவரும் வேலை தேடி சென்னைக்கு வந்தபோது, மேற்படி பெண்ணுக்கு
சென்னை, ஆலப்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கவே,
ரமணன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும், பின்னர் அப்பெண் அவருடன்
வேலை செய்து வரும் ஒரு பெண்ணுடன் ஆலப்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு
எடுத்து தங்கி வருவதாகவும், இந்நிலையில், கடந்த 10.08.2026 அன்று ரமணன்
சென்னைக்கு வந்து, மேற்படி பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, வேலையை
விட்டு தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தபோது, அப்பெண் மறுக்கவே, ரமணன்
தகாத வார்த்தைகளால் பேசி திட்டி சென்றதாகவும், மீண்டும் 28.08.2026 அன்று
விடியற்காலை, ரமணன் மேற்படி பெண்ணின் வீட்டிற்கு சென்று, மீண்டும் தன்னுடன்
ஊருக்கு வருமாறு அழைத்து, தகாத வார்த்தைகளால் பேசி கையால் தாக்கி கீழே
தள்ளிவிட்டதாகவும், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதைக்கண்ட ரமணன்,
அவர் மேற்படி பெண்ணுக்கு வாங்கி கொடுத்த செல்போனை பிடுங்கி கொண்டு
கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும், தனது வீட்டிற்கு வந்து தாக்கி கொலை
மிரட்டல்விடுத்த ரமணன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட மேற்படி
பெண் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது, பாரதிய நியாய
சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு
சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார்
விசாரணை மேற்கொண்டனர்.
T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி ரமணன், வ/22,
நாகை ரோடு, வேதாரண்யம், நாகப்பட்டிணம் மாவட்டம் என்பவரை நேற்று
(07.09.2026) கைது செய்தனர்..
கைது செய்யப்பட்ட எதிரி ரமணன் என்பவர் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(07.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.
