சென்னை, திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டம், எல்லீஸ் ரோடு பகுதியில் வசித்து வரும்
செல்வநாதன், வ/32 என்பவர் கடந்த 25.05.2026 அன்று சமூக வலைதளமான முகநூலை
பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் வந்த விளம்பரத்தில் பக்ரீத்தை முன்னிட்டு குறைந்த
விலையில் செல்போன் தருவதாக இருந்ததை பார்த்து உள்ளீடு செய்து செல்போன்களை
பார்த்தபோது, ரூ.28,000/- மதிப்புள்ள செல்போனை ரூ.22,000/-க்கு விற்கின்ற செல்போனை
வாங்குவதற்காக ரூ.22,000/- பணத்தை இணையம் வழியாக செலுத்திய பின்னர் அடுத்த வாரம்
டெலிவரியாகும் என தெரிவித்ததாகவும், அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து செல்போன்
கிடைக்காததால் மேற்படி இணைய முகவரியில் தொடர்பு கொண்டபோது, அது போலி என
தெரியவந்ததின்பேரில், செல்வநாதன் மேற்படி சம்பவம் குறித்து D-1 திருவல்லிக்கேணி காவல்
நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை
மேற்கொண்டனர்.
D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் மற்றும் திருவல்லிக்கேணி மாவட்ட சைபர் கிரைம் காவல் குழுவினர் ஒருங்கிணைந்து
நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மேற்படி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட எதிரிகள்
1.கார்த்திக், வ/35, ஜனதா நகர், குரோம்பேட்டை, சென்னை, 2.கோகுலகிருஷ்ணன், வ/32,
ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம், சென்னை ஆகிய இருவரை 28.08.2026 அன்று கைது
செய்தனர். இவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள் மற்றும் 1
லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி கார்த்திக் செல்போன் உதிரிபாகங்கள் சப்ளை செய்து வருவதும்,
மற்றொரு எதிரி கோகுலகிருஷ்ணன், மாடம்பாக்கம் பகுதியில் செல்போன் மற்றும் லேப்டாப்
சர்வீஸ் கடை நடத்தி வருவதும், எதிரிகள் இருவரும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக
வலைதளங்களில் குறைந்த விலையில் செல்போன்கள் விற்பதாக விளம்பரம் செய்து
பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (29.08.2026)
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஆன்லைனில்
பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக
பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
