சென்னை – 14 நவம்பர், 2026 தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை நவீனப்படுத்தவும், வாகன ஓட்டிகளின் பயணத்தை எளிதாக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை இடையிலான பகுதியில் அமைந்துள்ள நெமிலி சுங்கச்சாவடியில், பல வழித்தட தடையற்ற பயணத்துடன் கூடிய சுங்கக் கட்டண வசதியை (Multi-Lane Free Flow – MLFF – எம்எல்எஃப்எஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாட்டில் இந்த நவீனத் தொழில்நுட்ப வசதியைப் பெற்ற இரண்டாவது சுங்கச்சாவடியாக நெமிலி மாறியுள்ளது. இதற்கு முன்பு, 2026 அக்டோபரில் பரனூர் சுங்கச்சாவடியில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தத் தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, சிறந்த செயல்திறன் ஆகியவை உறுதி செய்யப்படுவதுடன், வாகன ஓட்டிகளின் பயணமும் எளிதாகிறது.
இந்த நவீன எம்எல்எஃப்எஃப் தொழில்நுட்பத்தின் மூலம், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்களைச் சுங்கச்சாவடியில் நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வாகனப் பதிவு எண்ணை தானியங்கி முறையில் அடையாளம் காணும் தொழில்நுட்பம் (ஏஎன்பிஆர்), ஃபாஸ்டேக் (FASTag) அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி, வாகனங்கள் தடையின்றித் தொடர்ந்து செல்ல முடியும்.
இந்த முறையில் மனிதர்களின் நேரடித் தலையீடு பெருமளவு குறைக்கப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் குறையும். எரிபொருள் செலவு குறைவதோடு, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையும் மாசுபாடும் குறையும். மேலும், ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தடையின்றிச் செல்வதால் சுங்கச்சாவடிகளின் செயல்பாட்டுத் திறன் மேம்படும்.
முக்கியமான தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் இந்த எம்எல்எஃப்எஃப் வசதியைப் படிப்படியாக விரிவுபடுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
