சென்னை – 11 நவம்பர், 2026 பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (எய்ம்ஸ்) 2021-2022 முதல் 2026-2027- ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் 2026 அக்டோபர் 31 நிலவரப்படி மொத்தம் ஆறு கோடிக்கும் அதிகமான புறநோயாளிப் பிரிவு ஆலோசனைகளை வழங்கியுள்ளன. இச்சாதனை இந்நிறுவனங்களில் வளர்ந்து வரும் செயல்திறனையும் நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு சிறப்புமிக்க சுகாதார சேவைகள் எளிதில் சென்றடையச் செய்வதில் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.
குறைந்த கட்டணத்தில் நம்பகமான சிறப்பு சுகாதார சேவைகள் கிடைப்பதில் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைக்க எய்ம்ஸ் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்முயற்சி சிறப்பு சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதுடன் நாட்டின் மருத்துவ கல்வி, ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்ட 22 புதிய எய்ம்ஸ் நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் முழுமையாக செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் புறநோயாளிப் பிரிவு, உள்நோயாளிப் பிரிவு பராமரிப்பு, அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சைகள், நோய் கண்டறிதல், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளிக்கின்றன.
இந்நிறுவனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை ஆண்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ள புறநோயாளிப் பிரிவு புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. 2026-2027- ம் நிதியாண்டில் அக்டோபர் வரை இந்த புதிய எய்ம்ஸ் நிறுவனங்களில் 97.41 லட்சம் புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
