சென்னை – 7 நவம்பர், 2026 உத்தராகண்டில் தொழில், சுற்றுலா வளர்ச்சியுடன் எல்லைக் கிராமங்களின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது மத்திய அமைச்சர் அமித் ஷா.
உத்தராகண்டில் தொழில், சுற்றுலா வளர்ச்சியுடன் எல்லைக் கிராமங்களின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டேராடூனில் நடைபெற்ற உத்தராகண்ட் மாநில தின விழாவில் பேசிய அவர், 2022 முதல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 சதவீதமும், தனிநபர் வருமானம் 40 சதவீதமும் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.3.56 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதில், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். ரூ.1,508 கோடி மதிப்பிலான 63 வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
மாநிலத்தில் பொது சிவில் சட்டம், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் கடுமையான சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் சுற்றுலாத் துறை 380 சதவீதம் வளர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். வெளியில் இருந்து பணம் பெறுதலைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து தொழில்துறைப் பொருளாதாரமாக மாநிலம் மாற்றப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார்.
தில்லி–டேராடூன் பொருளாதார வழித்தடம், சார்தாம் சாலைத் திட்டம், ரயில்வே, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களுடன் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடும், கூட்டுறவு அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 51 எல்லைக் கிராமங்களில் ரூ.270 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
