சென்னை – 4 நவம்பர், 2026 சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் மட்டுமே முதல்வர் விஜய் ஈரோடு செல்கிறார் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பெருந்துறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட கூடும் என்ற சூழலில், அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு இன்று சென்றுள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக அரசு மீது பல்வேறு அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் எங்கு இடைத்தேர்தல் வருகிறதோ, அந்தத் தொகுதிகளை மையப்படுத்தி மட்டுமே முதலமைச்சர் விஜய் தனது திட்டங்களையும், பயணங்களையும் மேற்கொள்கிறார்" என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் முதலமைச்சராக இருக்கும் விஜய், ஒட்டுமொத்த மாநில மக்களுக்கும் சேவை செய்யாமல், தேர்தல் நடக்கும் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நலத்திட்டங்களை அறிவித்து வருவதாகவும், இடைத்தேர்தல் பரப்புரையாகவே, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
தவெக ஆட்சியில் நிர்வாகக் கோளாறுகள் மலிந்துள்ளன. கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையால் தான் ஜிஎஸ்டி வரி வசூல் சரிந்துள்ளது, விலைவாசியும் உயர்ந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
