hello madras mobile banner 1200x300

கோயில் அறங்காவலர் நியமனத்தில் விதிமீறல்; தலைமை நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்திய சிறப்பு அதிகாரிக்கு கண்டனம்: மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது ஐகோர்ட்

மும்பை – 1 நவம்பர், 2026 நாசிக் கோயில் அறங்காவலர் நியமனத்தில் அப்போதைய தலைமை நீதிபதியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்த சிறப்பு அதிகாரியின் சட்டவிரோத நடவடிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சப்தசிருங்கி நிவாசினி தேவி கோயில் அறக்கட்டளையின் புதிய அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் பணிகள் மாவட்ட முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி தலைமையில் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதன்படி, கடந்த மார்ச் 12ம் தேதி தகுதிவாய்ந்த அறங்காவலர்களின் பரிந்துரைப் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால், அடுத்த இரண்டு நாட்களில், அதாவது மார்ச் 14ம் தேதி, அப்போதைய மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சிறப்பு அதிகாரியாகப் பதவி வகித்த 4வது எதிர்மனுதாரர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தலைமை நீதிபதியின் வாய்மொழி உத்தரவின்படி கோயில் அறங்காவலர் பரிந்துரைப் பட்டியல் இணையதளத்தில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இப்பட்டியல் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மகாராஷ்டிரா பொது அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதிக்கு இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லாத நிலையில், சிறப்பு அதிகாரியின் இந்த அத்துமீறிய செயலால் பாதிக்கப்பட்ட 5 நபர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.குல்கர்னி மற்றும் டாக்டர் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது. அப்போது, தலைமை நீதிபதியின் பார்வைக்கோ அல்லது ஒப்புதலுக்கோ எந்தவொரு கோப்பும் அனுப்பப்படாமல், சிறப்பு அதிகாரி தன்னிச்சையாக தலைமை நீதிபதியின் பெயரைப் பயன்படுத்தி அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘தலைமை நீதிபதியின் செயலகத்தில் பணிபுரிவதால் மட்டுமே, நிர்வாக ரீதியாகக் கூட தலைமை நீதிபதியால் பிறப்பிக்க முடியாத இத்தகைய சட்டவிரோத உத்தரவுகளை வெளியிட எவருக்கும் அதிகாரம் கிடையாது.

இது உயர் பதவியின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் மிகக் கடுமையான ஒழுங்கீனச் செயல்’ என்று எச்சரித்தனர். மேலும், சட்ட நெறிமுறைகளை மீறி சிறப்பு அதிகாரி பிறப்பித்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையையும், அதன் அடிப்படையில் நாசிக் மாவட்ட முதன்மை நீதிபதி பிறப்பித்த நியமனத் தடை உத்தரவையும் உயர்நீதிமன்றம் முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டது.

Read the full e-paper

Translate »