சென்னை – 15 நவம்பர், 2026 கோவாவில் நடைபெறவுள்ள 57- வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக, புகழ்பெற்ற போலந்து இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய ‘ஃபாதர்லேண்ட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் படமாக இப்படம் இடம்பெறுகிறது.
1949- ம் ஆண்டு கோடைக்காலத்தில், பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது நடக்கும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி எழுத்தாளர் தாமஸ் மான், அவரது மகள் எரிகா ஆகியோருக்கு இடையிலான உறவை இப்படம் பேசுகிறது. நடிகை, எழுத்தாளர், கார் பந்தய வீராங்கனை எனப் பன்முகத் திறன் கொண்டவர் எரிகா.
அமெரிக்காவில் 16 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த தாமஸ் மான், 1949- ல் மகளுடன் ஜெர்மனிக்குத் திரும்புகிறார். போரால் சிதைந்த நாட்டின் பல பகுதிகளைக் கடந்து அவர்கள் பயணிக்கின்றனர். அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்த பிராங்க்பர்ட் நகரில் தொடங்கி, சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வீமர் நகரம் வரை அவர்களின் பயணம் தொடர்கிறது.
பிளவுபட்ட ஜெர்மனியின் போர் பாதிப்புடன், தங்களது குடும்பத்துக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். குடும்ப உறவுகள், வரலாறு, சொந்த மண் மீதான பற்று ஆகியவை படத்தின் முக்கியக் கருப்பொருள்களாக உள்ளன.
