சென்னை – 3 நவம்பர், 2026 கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக தனக்கு ரூ.5 கோடி வழங்க ஒருவர் முன்வந்ததாகவும், அந்தத் தகவலை லயோலா மணி தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தளபதி தகுதியற்ற ஒருவருக்கு எந்தப் பதவியையும் வழங்க மாட்டார் என்றும், தகுதியின் அடிப்படையில் புஷ்பவனம் குப்புசாமிக்கு எந்தவிதப் பணமும் பெறாமல் அந்தப் பதவி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ராஜ்மோகனின் பொதுவெளிப் பேச்சை அடிப்படையாகக் கொண்டு, திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன், நவம்பர் 2ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ரூ.5 கோடி லஞ்சம் வழங்க முன்வந்த நபர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும், அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி ஆகியோருக்குத் தெரிந்தே இந்தத் தகவல் பரிமாறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லஞ்சம் வழங்க முன்வந்த நபர், லயோலா மணி மூலமாக அமைச்சரை அணுகியதாக அமைச்சரின் பேச்சிலிருந்து தெரியவருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்காமல் இருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவுகள் 8 மற்றும் 12, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் விசாரணையில் தெரியவரும் பட்சத்தில் பிரிவு 7A ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகன், லயோலா மணி மற்றும் ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, லஞ்சம் வழங்க முன்வந்த நபரின் அடையாளம், சம்பவம் நடைபெற்ற தேதி, இடம் மற்றும் அதன் பின்னணி ஆகியவற்றைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பேசியதன் அசல் மற்றும் திருத்தப்படாத காணொளிப் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையிலான தொலைபேசி அழைப்பு விவரங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னணுத் தகவல் பரிமாற்றங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற, நியாயமான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் அதன் நகலையும் புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என ஐ. பரந்தாமன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் பொதுவெளிப் பேச்சைத் தொடர்ந்து ரூ.5 கோடி லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
