சென்னை – 4 நவம்பர், 2026 குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி, முன்பணமாக பல கோடிகளை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் மணிவண்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியகுற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் விசாணையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முத்துவேல் (எ) லயன் முத்துவேல் (எ) B.M. செட்டியார் (எ) முத்துகிருஷ்ணா அவரது கூட்டாளியான குருபரன் (எ) ஜெகன் ஆகியோர் மேற்படி மணிவண்ணன் என்பவருக்கு ரூ.50 கோடி கடன் தருவதாக கூறி ரூ.2 கோடி முன்பணம், காசோலைகள் மற்றும் வெள்ளைத்தாள்களில் கையொப்பம் பெற்று ஏமாற்றியதுடன், கூடுதல் தொகை கேட்டு மிரட்டியது தெரியவந்ததின் பேரில் தலைமறைவாக இருந்த மேற்படி இருவரையும் ஆந்திர மாநிலம், ஒங்கோலில் வைத்து, கடந்த 20.10.2026 அன்று தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தும், பின்னர் அன்றையதினமே மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி திருகுமரன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, மூவரும் தற்போது புழல் சிறையில் உள்ளனர். மேலும் விசாணையில் எதிரிகள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேற்படி எதிரிகள் லயன் முத்துவேல், குருபரன் (எ) ஜெகன் தொடர்ந்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் மேற்படி இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் அவர்கள் கடந்த 28.10.2026 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில் எதிரிகள் இருவரும் புழல் மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
