சென்னை, கீழ்பாக்கம், மண்டபம் ரோடு, 1வது தெருவில் குடும்பத்துடன் வசித்து
வரும் விஜய், வ/39 என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், கடந்த
01.09.2026 அன்று இரவு விஜய்க்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இவரது மனைவி
வேளாங்கன்னியின் அக்கா மகன் பிரேம்குமார் என்பவருக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டபோது, வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜய் வீட்டிலிருந்த பெயிண்ட்
அடிக்கும் தின்னரை பிரேம்குமார் மீது ஊற்றியபோது, ஆத்திரமடைந்த பிரேம்குமார்
வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து விஜயை தாக்கியதாகவும், மேலும்,
பிரேம்குமாரின் தந்தை ரவி என்பவர் அருகிலிருந்த கட்டையை எடுத்து விஜயை
தாக்கியதாகவும், தந்தையும் மகனும், விஜயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து
சென்றதாகவும், இரத்தக்காயமடைந்த விஜய் கே.எம்.சி. மருத்துவமனையில்
உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மேற்படி சம்பவத்தில் தனது கணவர்
விஜயை தாக்கிய பிரேம்குமார் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்கும்படி
விஜயின் மனைவி வேளாங்கன்னி என்பவர் கொடுத்த புகார் மீது K-6 டி.பி. சத்திரம்
காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,
போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
K-6 டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி ரவி, வ/54,
மண்டபம் ரோடு 1வது தெரு, டி.பி. சத்திரம், சென்னை என்பவரை நேற்று (02.09.2026)
கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி ரவி விசாரணைக்குப் பின்னர் நேற்று (02.09.2026)
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.
மேலும், இவ்வழக்கின் முக்கிய எதிரி பிரேம்குமார் IMH மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
