hello madras mobile banner 1200x300

குடும்ப உறவுகளையும் புதிய வாழ்க்கைக்கான தேடலையும் பேசும் ‘ஐ மேட்டர்’ திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது

சென்னை – 15 நவம்பர், 2026 குடும்ப உறவுகளையும் புதிய வாழ்க்கைக்கான தேடலையும் பேசும் ‘ஐ மேட்டர்’ திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) 57- வது பதிப்பில், அலினா ஷெர்பான் எழுதி இயக்கிய ‘ஐ மேட்டர்’ ( I Matter) திரைப்படம், சிறப்புத் திரைப்படமாக இந்தியாவில் முதன்முறையாகத் திரையிடப்பட உள்ளது.

ருமேனியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்தப் படம், 101 நிமிடங்கள் ஓடக்கூடியது. ரோமானிய, ரோமானி மொழிகளில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அடையாளம், குடும்ப உறவு, சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுதல், புதிய வாழ்க்கைக்கான தேடல் ஆகியவை படத்தின் முக்கியக் கருப்பொருள்களாகும்.

அனாதை இல்லத்தில் வளர்ந்த ரெபெக்கா என்ற இளம் ரோமானியப் பெண், அங்கிருந்து வெளியேறத் தயாராகிறாள். சிறையிலிருந்து தந்தை விடுதலையாக உள்ளதால், நீண்டகாலமாக ஏங்கிய குடும்ப வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறாள். நடிப்பு தொடர்பான படிப்புக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதும் அவளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால், கடந்தகால அனுபவங்கள் அவளை மீண்டும் துரத்துவதால் கடினமான முடிவுகளை எதிர்கொள்கிறாள்.

இது அலினா ஷெர்பானின் முதல் முழுநீளத் திரைப்படமாகும். இவரது முந்தைய படைப்புகளில் ‘அலோன் அட் மை வெட்டிங்’, ‘ ஜிப்ஸி குயின்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ‘ஜிப்ஸி குயின்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Read the full e-paper

Translate »