சென்னை, எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், தாமரை விநாயகர் தெருவில்
வசித்து வரும் விக்னேஷ், வ/29 என்பவர் கார் டீலராக வேலை செய்து வருவதாகவும்,
இவரது தூரத்து உறவினர் இறந்துவிட்டதால், விக்னேஷ், இவரது தம்பி கிஷோர்
என்பவருடன் கடந்த 02.09.2026 அன்று மாலை இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று,
எம்.ஜி.ஆர். நகர், பச்சையப்பன் தெருவில் உள்ள சுடுகாடு அருகே சென்று
கொண்டிருந்தபோது, அங்கு ஆடிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முனுசாமி
என்பவரின் கால் தம்பி கிஷோர் மீது பட்டதால், கிஷோர் பார்த்து ஆடுமாறு
கூறியதாகவும், உடனே தகாத வார்த்தைகளால் பேசிய முனுசாமியை
அருகிலிருந்தவர்கள் தடுத்து அனுப்பியதாகவும், பின்னர் இறுதி சடங்கு முடித்து, இரவு,
விக்னேஷும் தம்பி கிஷோரும், எம்.ஜி.ஆர். நகர், வெங்கட்ராமன் சாலையில் உள்ள
பேக்கரிக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேற்படி முனுசாமி இருவரையும்
வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கியும், தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் கிஷோரின் தலையில் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்து
தப்பிச் சென்றதாகவும், இரத்தக்காயமடைந்த கிஷோர் இராஜிவ்காந்தி அரசு
மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேற்படி
சம்பவம் குறித்து விக்னேஷ் என்பவர் R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில்
கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை
மேற்கொண்டனர்.
R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி
முனுசாமி, வ/24, சூளைப்பள்ளம், எம்.ஜி.ஆர். நகர், சென்னை என்பவரை நேற்று
(03.09.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய
1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி முனுசாமி மீது ஏற்கனவே 2024ம் ஆண்டு R-10
எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி முனுசாமி விசாரணைக்குப் பின்னர் நேற்று
(03.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.
