hello madras mobile banner 1200x300

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை – 18 நவம்பர், 2026 இனிகோ பிரபாகர் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். எஸ்.என். ஃபாசில் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் சார்பில் விநியோகஸ்தர் குகன் இப்படத்தை வழங்குகிறார்.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை ஒரே இரவில் நடைபெறுகிறது. ஒரு கிராமத்தில் ஐந்து நண்பர்களுக்குப் புதையல் கிடைக்கிறது. அந்தப் புதையல் அவர்களை எத்தகைய எதிர்பாராத சம்பவங்களுக்கும் சிக்கல்களுக்கும் அழைத்துச் செல்கிறது என்பதே படத்தின் சுவாரசியமான கதைக்களமாக அமைந்துள்ளது. இதற்காகப் படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரங்களிலேயே நடைபெற்றுள்ளது.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன், தயாரிப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் இணைந்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ், இயக்குநர் சிவபிரபு கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும், படக்குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளதாகவும் தெரிவித்தார். படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவரும் என்றும், அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

நடிகர் உதயராஜ் பேசுகையில், படம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களிலிருந்தே பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். நடிகர் இனிகோ பிரபாகர் இப்படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாகவும் பாராட்டினார்.

விநியோகஸ்தர் குகன் பேசும்போது, இளம் திறமையாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இப்படம் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கும் உரிய வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றும், திரையரங்க வெளியீட்டுத் திட்டமிடலில் தெளிவு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இயக்குநர் மணிகண்டன், சிவபிரபுவின் நீண்டகால முயற்சியையும் திரைப்பட உருவாக்கத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டினார். இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் பேசுகையில், நடிகர் இனிகோ பிரபாகரின் நடிப்புத் திறமையைப் பாராட்டியதுடன், இப்படம் அவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் வெற்றியையும் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் இனிகோ பிரபாகர், கதையைக் கேட்டவுடனேயே இப்படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், இயக்குநர் சிவபிரபு உள்ளிட்ட படக்குழுவினரின் ஒத்துழைப்பும் உழைப்பும் படத்தைச் சிறப்பாக உருவாக்க உதவியதாகவும் தெரிவித்தார். இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், ஒத்துழைப்பு அளித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Translate »