சென்னை – 11 நவம்பர், 2026 சென்னை,10 2026: கேன்சர் அல்லாத புரோஸ்டேட் சுரப்பி வீக்கங்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த ‘ரெசூம் நீராவி சிகிச்சை’ என்ற குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சையை ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேன்சர் அல்லாத புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாத நிலை அல்லது சிறுநீர் தேங்குதல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். பொதுவாக வீக்கமடைந்த புரோஸ்டேட் திசுக்களை குணப்படுத்த அறுவை சிகிச்சை அல்லது லேசர் முறை மூலம் திசுக்கள் அகற்றப்படும். ஆனால் அமெரிக்காவில் உருவான ரெசூம் சிகிச்சை முறையில் நீராவியில் உள்ள வெப்பத்தின் மூலம் வீக்கமடைந்த திசுக்களை குணப்படுத்த முடியும்.
தற்போது இந்தச் சிகிச்சை ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையில், அதன் சிறுநீரக-புற்றுநோயியல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் சிவராஜ் பரத்குமார் அவர்களால் வழங்கப்படுகிறது.
இச்சிகிச்சை முறை குறித்து விளக்கிய டாக்டர் சிவராஜ் பரத்குமார், “ரெசூம் என்பது கேன்சர் இல்லா புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கான ஒரு குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறையாகும். அறுவை சிகிச்சை மூலம் புரோஸ்டேட் திசுக்களை அகற்றுவதற்குப் பதிலாக, ஒரு சிறிய எண்டோஸ்கோபி கருவியைப் பயன்படுத்தி, புரோஸ்டேட் சுரப்பியில் ஒரு மெல்லிய ஊசியின் மூலம் சூடாக்கப்பட்டு கிருமி நீக்கப்பட்ட சுத்தமான நீராவியை வீக்கமடைந்த திசுவிற்குள் நேரடியாகச் செலுத்துகிறோம். இது வெப்ப சிதைவை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சிகிச்சை அளிக்கப்பட்ட திசு படிப்படியாக உடைந்து நோயாளியின் உடலாலேயே உறிஞ்சப்படுகிறது. பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த சிகிச்சையில் மிகக் குறைந்த இரத்த இழப்பே ஏற்படும். சிகிச்சையின் நேரமும் வெகுவாக குறைகிறது,” என்றார்.
வழக்கமான புரோஸ்டேட் அறுவை சிகிச்சைகளுக்கு சுமார் 60-90 நிமிடங்களும், லேசர் சிகிச்சைகளுக்கு 2-3 மணிநேரமும் தேவைப்படும் நிலையில், ரெசூம் நீராவி சிகிச்சையை வெறும் 3-5 நிமிடங்களுக்குள் செய்து விட முடியும். மேலும், இதில் உடலுக்குள் எந்த சாதனமும் பொருத்த தேவையில்லை.
வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு 22-24 பிரெஞ்ச் சுற்றளவுள்ள பெரிய சிறுநீர் கேத்தீட்டர் தேவைப்படலாம் என்ற நிலையில், ரெசூம் சிகிச்சைக்குப் பிறகு 14 பிரெஞ்ச் அளவுள்ள சிறிய வடகுழாயே போதுமானது. சிறுநீர்வழியை அதிகமாக விரிவாக்கம் செய்யும் தேவையுமில்லை. எனவே, அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஏற்படும் அசௌகரியம் குறைவாக இருக்கும். ரெசூம் சிகிச்சையின் மற்றொரு முக்கியமான நன்மை, உட்சுருங்கு தசை பாதுகாக்கப்படுவதாகும். இதனால் விந்து பின்னோக்கி பாயும் ஆபத்து குறைவு. குறிப்பாக, இது குழந்தை பேறு வேண்டும் இளம் நோயாளிகளுக்கு அவசியமாகிறது.
சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற்ற நோயாளிகளுள் ஒருவருக்கு 80 வயது. அவருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய தமனி நோய் இருந்தது. கடந்த ஓராண்டாகச் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை சந்தித்து வந்தார். நிலைமை படிப்படியாக மோசமடைந்து, தீவிர சிறுநீர் அடைப்பு ஏற்பட்டதால், நோயாளிக்கு மற்றொரு மருத்துவமனையில் சிறுநீர் வடகுழாய் செலுத்தப்பட்டது. அவரது வயது, உடல் பலவீனம் மற்றும் பிற நோய்களைக் கருத்தில் கொண்டு, வழக்கமான அறுவை சிகிச்சைகளை அவருக்கு செய்ய முடியாத நிலை இருந்தது.
இருப்பினும், ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையில் முதியவருக்கு ரெசூம் நீராவி சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் முப்பத்தியாறு மணிநேரத்திற்குள்ளேயே அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பத்தாவது நாளில் அவரது சிறுநீர் வடகுழாய் அகற்றப்பட்டது. அதன் பிறகு, வடகுழாய் உதவியின்றி இவரால் இயல்பாகச் சிறுநீர் கழிக்க முடிந்தது. மேலும், தொடர் மருத்துவ பரிசோதனைகளின் போதும் அவர் நலமுடன் இருக்கிறார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், பேசுகையில், “வயது மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக, புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ள சில நோயாளிகளுக்கு வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளை செய்ய முடியாத நிலை ஏற்படலாம். இவர்களுக்கு, ரெசூம் நீராவி சிகிச்சை என்னும் குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை நல்ல மாற்றாக அமையலாம். இதில் குறைந்தளவு இரத்த இழப்பு, குறுகிய சிகிச்சை நேரம் மற்றும் விரைவான ஆரோக்கியம் ஆகிய நன்மைகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு இன்னும் ஒரு கூடுதலான சிறுநீரக சிகிச்சை சேவையை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சித்துள்ளோம்,” என்றார்.
