9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றும்: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

0
389

இனி நடைபெற இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அண்ணா தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட கூறினார்.

நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. போட்ட கணக்கு தலைகீழாக போய்விட்டது என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டும் என்று கேட்கும் காங்கிரஸ், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுவிலக்கு வேண்டும் என்று கேட்பார்களா? மாநிலத்திற்கு மாநிலம் கொள்கை மாறுமா? என்றும் காங்கிரஸ் தலைவருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசினார். அவர் பேசும்போது, அவருக்கும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

ராமசாமி:–குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? இந்த சட்டத்தில் 2004–ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு இப்போது தான் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜாதி, மதத்தின் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சில இன மக்களுக்கு அச்சம் ஏற்படும். குடியுரிமை யாருக்கு என்பதில் பிரச்சினை வரும். இதற்கெல்லாம் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். மகாராஷ்டிரா, கர்னாடக மாநிலங்களில் எல்லாம் முகாம்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது எதற்கு?

தமிழ்நாட்டில் எங்கே முகாம் இருக்கிறது

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:– தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை கொண்டு வந்தது சிதம்பரம் தான். 2010ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு நடந்தது. இப்போது மீண்டும் அது நடைபெற இருக்கிறது. ஜாதி எல்லாம் அதில் கேட்கப்படவில்லை. முகாம், முகாம் என்று சொல்லுகிறார். தமிழ்நாட்டில் எங்கே முகாம் இருக்கிறது. இங்கு யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு அம்மாவின் அரசு என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும். கர்னாடகத்தில் முகாம் இருக்கிறது என்றால், நீங்கள் அங்கு போய் பேசுங்கள். இங்கே ஏன் அது பற்றி பேசுகிறீர்கள். 30 ஆண்டு காலமாக அம்மாவின் அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு அம்மாவின் அரசு பாதுகாப்பாக இருக்கும்.

இங்கு தேசிய குடியுரிமை பதிவேடு வரவில்லை. இதனால் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிறுபான்மை மக்களுக்கு என்றென்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது

அமைச்சர் சி.வி.சண்முகம்:– நேற்று முதல் இது பற்றி விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அசாமில் 19 லட்சம் பேர் முகாமில் அடைக்கப்படுவார்கள். இந்தியாவில் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெளிவாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். பிரதமரும் தௌிவாக சொல்லியிருக்கிறார். என்.ஆர்.சி. பற்றி அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை. அது பற்றி விவாதிக்கப்படவும் இல்லை என்று பிரதமர் தௌிவுப்பட கூறியிருக்கிறார். ஆனால் இங்கு என்.ஆர்.சி. வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். பிரதமர் தெளிவாக சொன்ன பிறகும், ‘‘வந்துவிட்டால்’’ என்று யூகத்தின் பேரில் சொன்னால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:– இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இது பற்றி மேலும் விவாதிப்பது சிறந்ததாக இருக்காது.

துரைமுருகன் (தி.மு.க.):– வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால், அதன் உள்ளே செல்லக்கூடாது. ஆனால் வழக்கை பற்றி பேசலாம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– நீங்கள் அமைச்சராக இருந்தபோது என்ன சொன்னீர்களோ, அதை தான் அமைச்சரும் சொல்கிறார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, அது பற்றி பேசக்கூடாது, அது மரபல்ல என்று நீங்கள் அன்று சொன்னீர்கள். அது அவைக்குறிப்பில் இருக்கிறது.

ராமசாமி:– நீட் தேர்வு என்ன ஆனது?

அமைச்சர் விஜயபாஸ்கர்:– இதற்கு விதை விதைத்ததே நீங்கள் தான்.

ராமசாமி:– விதை விதைத்த போது எந்த மாநிலம் வேண்டுமோ, அதனை அந்த மாநிலம் ஏற்றுக்கொள்ளலாம் என்று தான் சொன்னோம்.

நீட் தேர்வுக்கு விதை விதைத்தது காங்கிரஸ்

அமைச்சர் விஜயபாஸ்கர்:–விதை விதைத்தது நீங்கள். அப்போதே இதனை அம்மா எதிர்த்தார். இந்தியா முழுவதும் இது அமுல்படுத்தப்படும் என்று சொன்னபோது, தமிழ்நாட்டுக்கு மட்டும் அம்மா விலக்கு கேட்டார். ஆனால் நீங்கள் விதையை போட்டு தண்ணீர் ஊற்றி, வளர்த்து விட்டீர்கள். இது ஆபத்து என்று சொன்னபோது கூட காங்கிரஸ் இதனை விடவில்லை. இங்கே சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நீட் தேர்வை கொண்டு வரமாட்டோம் என்று கூறுகிறார். இது எவ்வளவு பெரிய அபத்தம். இப்படி கூறினீர்களே. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றீர்களா?

ராமசாமி:– உள்ளாட்சி தேர்தலை கொண்டு வந்தீர்கள். அதனை வரவேற்கிறோம். இந்த தேர்தல் முடிவு பற்றி முதல்வர் குறிப்பிடும்போது ஒரு சதவீதத்திற்கு மேல் தான் தி.மு.க. அதிக வாக்கு வாங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– நாடாளுமன்ற தேர்தலின்போது லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றீர்கள். மக்கள் எங்கள் பக்கம் என்று சொன்னீர்கள். உள்ளாட்சி தேர்தலில் எவ்வளவு வாக்கு கிடைத்தது என்று புள்ளிவிவரம் எல்லாம் சொன்னீர்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவை வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெறலாம் என்று கணக்கு போட்டீர்கள். ஆனால் உங்கள் கணக்கு தலைகீழாக மாறிவிட்டது.

ஸ்டாலின் (தி.மு.க):– பாராளுமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் தான் நடந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால்….

தி.மு.க. கணக்கு தலைகீழாக மாறிவிட்டது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– நீங்கள் கனவு கண்டீர்கள். ஆனால் உங்கள் கணக்கு தலைகீழாக மாறிவிட்டது. கிராம மக்களின் வாக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று கணக்கு போட்டீர்கள். ஆனால் அந்த கணக்கு தலைகீழாக போய்விட்டது. இனி 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மக்கள் எங்களுக்கு அங்கீகாரத்தை தந்தார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னீர்கள். ஆனால் .70 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். அதாவது 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அப்போதே எம்.பி. தேர்தலில் பெற்ற வெற்றி நிலைமை மாறிவிட்டது.

ராமசாமி:– சிவகங்கை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஊராட்சி மன்றத்திற்கு 2 பேர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:– தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தியது. அது யாருடைய தலையீடும் இல்லாமல், சுயமாக செயல்பட்டது. தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்றது. உறுப்பினர் குறிப்பிட்ட சம்பவம் தற்போது நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கிறது. எனவே அது பற்றி மேலும் விவாதிக்க முடியாது.

நியாயமாக, நேர்மையாக உள்ளாட்சி தேர்தல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– தேர்தல் ஆணையம் நியாயமாக, நேர்மையாக தேர்தலை நடத்தியது. யாருடைய தலையீடும் இல்லை. 450க்கு மேற்பட்ட சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் இருந்தே தேர்தல் ஆணையம் எவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டது என்று தெரியும்.

ராமசாமி:– மதுபான கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னீர்கள். மதுவிலக்கையும் கொண்டு வருவோம் என்று சொன்னீர்கள். எவ்வளவு மதுக்கடைகளை மூடியிருக்கிறீர்கள்.

அமைச்சர் தங்கமணி:– 6,764 மதுக்கடைகள் இருந்தது. அம்மா வாக்குறுதி அளித்தப்படி 500 மதுக்கடைகளை மூடினோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தபின் மேலும் 500 மதுக்கடைகளை மூடியிருக்கிறோம். எனவே மீதி 5,764 கடைகள் இருந்தன. இப்போது அதுவும் குறைக்கப்பட்டு 5,500 கடைகள் தான் இருக்கிறது. மக்கள் மத்தியில் மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரளா, கர்னாடக, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் எல்லாம் மதுக்கடைகள் உள்ளன. எனவே இங்கு மட்டும் மூடிவிட்டால், கள்ளச்சாராயம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தான் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதற்காக தனியாக நிதி ஒதுக்கியிருக்கிறோம்.

உறுப்பினர் மதுவிலக்கு கொள்கை பற்றி பேசுகிறாரே? இது தமிழ்நாட்டுக்கு மட்டும் தானா? அருகில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்திற்கும் பொருந்துமா? அல்லது ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு கொள்கையா?

ராமசாமி:–முதலில் தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க என்ன வழி என்று பார்ப்போம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மதுபான விற்பனை பலமடங்கு உயர்ந்து இருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– மின்துறை அமைச்சர் கேட்ட கேள்விக்கு உறுப்பினர் பதில் என்ன? மாநிலத்திற்கு மாநிலம் மதுவிலக்கு கொள்கையில் காங்கிரசின் நிலை மாறுபடுமா?

அமைச்சர் சி.வி.சண்முகம்:– மதுபானத்தால் இளைஞர் சீரழிக்கப்படுகிறார்கள் என்கிறார். அப்படியானால் பாண்டிச்சேரியில் சீரழிவு இருக்காதா? பாண்டிச்சேரியில் சூதாட்ட கிளப் துவங்க அனுமதி கேட்டிருக்கிறார் புதுவை முதலமைச்சர். சூதாட்ட கிளப் கொண்டு வந்தால், பாண்டிச்சேரியில் சீரழிவு இருக்காதா? தமிழ்நாட்டில் சீரழிவு வராதா? தமிழ்நாட்டிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்ல மாட்டார்களா? இதற்கு உறுப்பினர் என்ன சொல்ல போகிறார்.

ராமசாமி:– இதில் எனக்கு மாறுப்பட்ட கருத்து இல்லை. மதுபான கடைகளை இங்கு படிப்படியாக மூடுவோம் என்று நீங்கள் சொன்னீர்கள்.ஆனால் அங்கு அப்படி சொல்லவில்லை. மதுபான கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம்?

அமைச்சர் தங்கமணி:– கடந்த ஆண்டை விட விற்பனை அதிகமாக உள்ளது என்று உறுப்பினர் கூறுகிறார். கடந்த ஆண்டைவிட மதுபானத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே விற்பனை அதிகமாக தெரிகிறது. பார்களை பொறுத்தவரை 5,500 கடைகளில் மொத்தம் 2,000 பார்கள் தான் உள்ளன. எனவே படிப்படியாக குறைத்து வருகிறோம். பூரண மது விலக்கு தான் அம்மாவின் கொள்கை. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்.

மதுவிலக்கு கொள்கையில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன. மாநிலத்திற்கு மாநிலம் காங்கிரசின் கொள்ளை மாறுமா? என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here