மாமல்லபுரத்திற்கு சீன நாட்டு குழு வருகை: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

0
412

மாமல்லபுரத்திற்கு பல்வேறு துறைகளை சேர்ந்த 100 பேர் கொண்ட சீன நாட்டு குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து ரசித்தனர். பின்னர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி வருகைக்கு பிறகு சீன நாட்டு பயணிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளை தெரிந்து கொள்ள சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பள்ளி மாணவர்களின் சுற்றுலா வருகையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் பீஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு நகரங்களை சேர்ந்த மருத்துவர்கள். பொறியாளர்கள், கம்ப்யூட்டர் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் கொண்ட 100 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

அவர்கள் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்தனர். குறிப்பாக மாமல்லபுரம் நகரின் முக்கிய புராதன சின்னமும், பல ஆண்டுகளாக இயற்கை பேரிடர் காலங்களில் கூட சிறிதும் நகராத பாறையின் நுனியில் நின்று காட்சி அளிக்கும் புகழ்பெற்ற வெண்ணை உருண்டை பாறை அருகில் ஒரு குழுவாக அமர்ந்து சீனர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அவர்களுக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளை சுற்றுலா வழிகாட்டிகள் கன்னியப்பன், மதன், அருண் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கிக் கூறினர்.

முன்னதாக சீனநாட்டினரை மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி எஸ்.சக்திவேல் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here