மனைவியை தாக்கிய வழக்கில் கணவன் கைது. மனைவி இறந்ததால் கொலை வழக்காக பிரிவு மாற்றம்

0
59

சென்னை, புளியந்தோப்பு, கார்ப்பரேஷன் காலனி, எண்.21 என்ற முகவரியில் ராமகிருஷ்ணன், வ/71 என்பவர் அவரது மனைவி ஜோதி, பெ/வ.65 என்பவருடன் வசித்து வருகிறார். கடந்த 07.7.2019 அன்று காலை மேற்படி ராமகிருஷ்ணனின் வீடு வெகுநேரமாகியும் திறக்காததால், அவர்களது மகன் தயாநந்தன் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், தயானந்தன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, ஜோதி தலையில் இரத்தக்காயத்துடன் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே தயாநந்தன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாய் ஜோதியை மருத்துவமனையில் சேர்த்ததன் பேரில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இது குறித்து தயாநந்தன் P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, தலைமறைவான ஜோதியின் கணவர் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சம்பவ தினமான 06.7.2019 அன்று இரவு ராமகிருஷ்ணனுக்கும், அவரது மனைவி ஜோதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ராமகிருஷ்ணன் ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியலால் மனைவி ஜோதியின் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவித்தார். அதன்பேரில், ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோதி நேற்று (11.7.2019) சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பேரில், மேற்படி சம்பவத்தில் கொலை முயற்சி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை பிரிவாக மாற்றம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here