பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த 3 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

0
414

உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது உயிரிழந்த 3 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜான்சன் என்பவர் 30.12.2019 அன்று ஆர்.டி. மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த முருகதாஸ் 1.1.2020 அன்று வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அறிவுடைநம்பி என்பவர் 3.1.2020 அன்று விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மைத்தில் பாதுகாப்புப் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மயக்கமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் ஜான்சன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ், அறிவுடைநம்பி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடைநம்பி ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here