சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக V-5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (28.08.2019) காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அண்ணாநகர், பாடிக்குப்பம் அருகில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அவ்வழியே TN 21 AF 0884 பதிவெண் கொண்ட ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் அந்த நபரின் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்துச் சென்ற ஆனந்தமூர்த்தி, வ/38, த/பெ.மோகன், எண்.12, ராமதாஸ் நகர், காட்டுப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மேற்படி ஸ்கூட்டி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (28.8.2019) மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கே.கே.நகர், 14வது செக்டாரிலுள்ள பூங்கா அருகே TN 09 BY 6260 பதிவெண் கொண்ட ஆட்டோவில் ரகசியமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிகிருஷ்ணன், வ/32, த/பெ.துரைராஜ், எண்.1964, 103வது தெரு, 14வது செக்டார், கே.கே.நகர், சென்னை-78 என்பவரை கைது செய்தனர். 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மேற்படி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.