திருப்பூர் அருகே புள்ளிமான் சரணாலயம் அமைக்க கோரிக்கை

0
43

திருப்பூர் அருகே விவசாய நிலங்களை பாழ்படுத்தும் புள்ளிமான்கள் கட்டுபடுத்தி சரணாலயம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ளது கோதபாளையம். கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல்லாயிரக்கணக்கான புள்ளிமான்கள் தங்களுக்கான வாழ்விடத்தை அமைத்து கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. ஆரம்பக் காலகட்டங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு கவுசிகா நதி வழியாக வந்த ஒன்று, இரண்டு புள்ளி மான்கள் இப்பகுதியிலேயே வாழத் தொடங்கின.
அடுத்தடுத்த காலகட்டங்களில் இந்த மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து தற்போது கோதபாளையம், புதுப்பாளையம், சாமந்தன் கோட்டை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி துலுக்கமுத்தூர், வாகராயம்பாளையம், செம்மாண்டம் பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளின் சுற்று வட்டார கிராமங்கள் என பல்வேறு இடங்களில் இந்த புள்ளி மான் கூட்டங்களை காணமுடிகிறது. வேட்டை விலங்குகளான சிறுத்தை, நரி, ஓநாய் உள்ளிட்டவைகள் இப்பகுதியில் இல்லாதது இந்த மான்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில் இப்பகுதியில் தற்போது பல்கிப் பெருகியுள்ள பல்லாயிரக்கணக்கான புள்ளிமான்களால் விவசாயிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் மான்களின் கூட்டங்களை பிரமிப்பாக பார்த்து ரசித்த இப்பகுதியினர் தற்போது அவைகளால் ஏற்படும் விளை நிலம் நாசத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் பயிர் செய்யப்படும் சோளம், கத்திரி, தக்காளி உள்ளிட்ட செடி வகை பயிர்களை இந்த மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து நாசம் செய்து செல்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே, இங்குள்ள புள்ளிமான்கள் கூட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி, அங்கு சரணாலயம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
ஆனால் புள்ளிமான்கள் மிகவும் மென்மையான, மிருதுவான சுபாவம் கொண்டவை. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு மாற்றி, அவற்றின் வாழ்விடத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினமான, அபாயத்தை ஏற்படுத்தும் காரியம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here