தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நானும், திராவிட முன்னேற்றக் கழகமும் மலேசிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம்”

0
534

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் – நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் உங்கள் அனைவரையும் மனதார வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய ‘கவிப்பேரரசு’ அண்ணன் வைரமுத்து அவர்கள், உங்களோடு எந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பும், பாசமும் – அதையும் தாண்டி அடிக்கடி தலைவர் கலைஞர் அவர்களும், நம்முடையை கவிப்பேரரசு அவர்கள் சொல்வது போல் ஒரு காதலே கொண்டிருந்தார் என்பது நாடறிந்த உண்மை!

அதேபோல், அவருடைய மறைவிற்கு பிறகு தொடர்ந்து என்னை உற்காசப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில், ஊடகங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளை எல்லாம் அடிப்படையாக கொண்டு, என்னை அவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த உற்சாகத்துடன், ஊக்கத்துடன் என்னுடைய பணியை முடிந்தவரை நான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் மலேசிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்திருக்கிறாரோ; அவர் வழியில், நானும் என்றைக்கும் பின்வாங்கிவிடாமல் இருப்பதுடன் – தொடர்ந்து உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்த பிரச்சினைகளாக இருந்தாலும், அதற்கு முதல் குரல் கொடுக்கும் ஒரு கழகமாக – திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்கும்!

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படி மக்கள் பணி ஆற்றுவதில் இந்த இயக்கம் ஒரு முன்னோடியாக இருந்து கொண்டிருக்கிறதோ, அது போல் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய ஓர் அமைப்பாக – எப்படி அறிஞர் அண்ணா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ அந்த வழிநின்று என்றும் உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்!

தமிழகத்திற்கு வருகை தந்து – இந்த அறிவாலயத்திற்கு வருகை தந்து உங்கள் மகிழ்ச்சியை அன்பை மிகச் சிறப்பாக பரிமாறிக் கொண்டிருக்கிறீர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் ஓர் ஆண்டு நினைவு மலர்தான் நினைவுப் பரிசாக உங்களிடத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணன் வைரமுத்து அவர்கள் சொன்னது போல் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு பொக்கிஷமாக இருந்தவர். எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள், மறைந்திருக்கிறார்கள்.  தலைவர் கலைஞர் அவர்களை பொறுத்தவரை – இன்றைக்கும் நீங்கள் அவர்கள் நினைவிடத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார்கள்.

உங்களைப் போலவே ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறைந்தபட்சம் 10,000 பேர் நினைவிடத்திற்கு வந்து தலைவருக்கு வணக்கத்தை செலுத்தி வருகின்றனர். இதுவரைக்கும் எந்த தலைவருக்கும் இப்படி ஒரு சிறப்பு இருந்ததில்லை. ஆனால் தலைவர் கலைஞரைப் பொறுத்தவரை மறைந்தாலும் இன்றைக்கும் நம்மிடத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரின் நினைவைப் போற்றும் வகையில்தான், அவருடைய ஓர் ஆண்டு நினைவு மலராக வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தை இன்றைக்கு உங்களிடத்தில் வழங்கி இருக்கிறோம். அதை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் அன்பு என்றைக்கும் தொடர்ந்து இருந்திட வேண்டும். அதேபோல் நாங்களும் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம் என்ற உறுதியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here