தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் இன்று (7.3.2020) காலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்

0
219

திராவிட முன்னேற்ற கழகத்தில் தமது வாழ்நாளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடு பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றி தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றிய பேராசிரியர் திரு. க. அன்பழகனார் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

திராவிட முன்னேற்ற கழகத்தில் 1977 முதல் 43 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்செயலாளராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தி.மு.க. அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு, நிதி, கல்வி போன்ற துறைகளை ஏற்று மிகச் சிறப்பாக பணியாற்றிய பெருந்தகையாளர் பேராசிரியர் அவர்கள்.

சிறுவயது முதல் தந்தை பெரியார், திரு.வி.க., போன்றவர்களின் எழுத்துக்களாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவர். தமது கருத்து வளம், நாவன்மை மூலம் மிக அற்புதமாக சொற்பொழிவு ஆற்றக்கூடிய பேராற்றல் மிக்கவர் பேராசிரியர். எவரிடமும் அன்பு காட்டி, இனிமையாக பழகக் கூடியவர்.

தமிழக அரசியலில் தலைவர் கலைஞரும், பேராசிரியரும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள். இவர்களிடையே நிலவிய இணக்கமான உறவுகளைப் போல வேறு எந்த இயக்கத்திலும் முன்மாதிரியாக எவரும் இருந்ததில்லை. ஒருவரை ஒருவர் சரியான புரிதலோடு திராவிட முன்னேற்ற கழகத்தை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை இந்த இருபெரும் தலைவர்களுக்கு உண்டு. சோதனையான காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதை எவரும் மறக்க முடியாது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தூண் சாய்ந்து விட்டது. தி.மு.க.வின் சிகரமாக இருந்த பேராசிரியர் மறைந்து விட்டார். பேராசிரியரின் மறைவு என்பது தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.  தி.மு. கழகத்தின் முதுபெரும் தலைவர் பேராசிரியரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் மற்றும்  தி.மு. கழக தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் அனுதாபத்தை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here