காவலன் எஸ்ஓஎஸ் செயலி அழைப்பின்பேரில் விரைந்து சென்று பாத்ரூமில் சிக்கிக் கொண்ட பெண்ணை மீட்ட காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

0
349

F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.எஸ்.பூஞ்சோலை மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/முதல்நிலைக் காவலர் திரு.எம்.சங்கர் (மு.நி.கா.43121) ஆகியோர் கடந்த 05.02.2020 அன்று பணியிலிருந்தபோது, மதியம் 12.30 மணிக்கு கட்டுப்பாட்டறையிலிருந்து வந்த தகவலின்பேரில், காவலன் எஸ்ஓஎஸ் செயலி மூலம் ஒரு பெண் உதவி கோரியிருப்பதாகவும், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் அருகிலுள்ள Hotel Park Elanza செல்லும்படியும் உத்தரவிட்டனர். அதன்பேரில், மேற்படி காவல் ஆளிநர்கள் Hotel Park Elanza க்கு 5 நிமிடங்களுக்குள் விரைந்து சென்று, காவலன் எஸ்ஓஎஸ் செயலி மூலம் உதவி கேட்டிருந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு போன் செய்தபோது, அவரது பெயர் மல்லிகா, வ/35, க/பெ.புருஷோத்தமன், ஏஜிஎஸ் காலனி 3வது குறுக்கு தெரு, கொட்டிவாக்கம், எனவும், அவர் மேற்படி ஓட்டலிலுள்ள பாத்ரூம் சென்றபோது, கதவு திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். உடனே, உதவி ஆய்வாளர் பூஞ்சோலை, தாங்கள் போலீஸ் எனவும், விரைவில் உங்களை மீட்கிறோம், கவலைப்படாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும், உதவி ஆய்வாளர் பூஞ்சோலை மற்றும் காவலர் சங்கர் ஆகியோர் விரைந்து செயல்பட்டு, ஓட்டல் நிர்வாகத்திடம் விவரத்தை தெரிவித்து, ஓட்டலிலிருந்து இரும்பு உபகரணங்கள் பெற்று மேற்படி பாத்ரூம் கதவை உடைத்து, உள்ளே சிக்கிய மல்லிகாவை மீட்டனர். காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி மூலம் உதவி கேட்டு 15 நிமிடங்களுக்குள் காவல் ஆளிநர்கள் விரைந்து சென்று பெண்ணை மீட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆபத்தில் சிக்கிய பெண்ணை விரைந்து சென்று காப்பாற்றிய F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.எஸ்.பூஞ்சோலை மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/முதல்நிலைக் காவலர் திரு.எம்.சங்கர் (மு.நி.கா.43121) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.02.2020) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here