“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி (அண்ணா அறிவாலயம்)

0
304

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது

“தி.மு.கழகம் எடுத்துவைத்த கோரிக்கைகளில் நியாயம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் வெளிப்படுத்தியுள்ளது”

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி.

கழகத் தலைவர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் அந்தத் தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாங்கள் ஒருக்காலும் நாடவில்லை. எதற்காக நீதிமன்றத்தை நாடினோம் என்றால், தொகுதி வரையறை சரியாக இல்லை, இடஒதுக்கீடு முறையிலும் முறையான நிலை இல்லை. இது இன்று நேற்றல்ல; 2016ம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்போதே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதற்கான தீர்ப்பும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைத்த கோரிக்கையை, அந்த நியாயத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு பல்வேறு கேள்விகளை, தமிழக அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், புதிதாக மாவட்டங்களைப் பிரித்துள்ளீர்களே – அதற்கு தொகுதி வரையறை முறையாக செய்யப்பட்டுள்ளதா? தேர்தல் அறிவித்த பிறகு, தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் புதிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆகவே குறுக்கு வழியில், சட்டப்படி அல்லாமல் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என இப்படிப்பட்ட காரியத்தைச் செய்துள்ளீர்களா? என்று வெளிப்பைடையாக உச்சநீதிமன்றம் தமிழக அரசிடமும், தேர்தல் ஆணையத்திடமும் கேட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று சொன்னால்; தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது என்று, திட்டமிட்டு தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அரசியல்வாதிகள் இந்த செயலைச் செய்தால் கூட, அரசியலுக்காக செய்கிறார்கள் என்று கருதலாம். ஊடகத்துறையில் உள்ள சிலரும் தி.மு.க.,தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்திற்கு செல்கிறது என தவறான பிரச்சாரம் தொடர்ந்து செய்கின்றனர்.

இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்த பிறகாவது இனி ஊடகங்கள் உண்மையை எடுத்து சொல்ல வேண்டும். தொடக்கம் முதல் தி.மு.க. எடுத்து வைக்கும் கோரிக்கை என்னவென்றால், புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 9 மாவட்டங்கள். அதில், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் எப்படி எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து இந்த பிரச்சனையை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதுதான் நேற்று உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மாநில தேர்தல் ஆணையமே அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை!

இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக வந்திருப்பது தி.மு.கழகத்தின் கோரிக்கைக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னது போல வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக இந்த தீர்ப்பு தி.மு.க.,விற்கு கிடைத்துள்ளது. இன்றைய தீர்ப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுடைய தொகுதி மறுவரையறையை முறையாகக் கடைப்பிடித்த பின்பே தேர்தலை நடத்த வேண்டும். இது தி.மு.க. வைத்த கோரிக்கை; அதைத்தான் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை. மீதம் இருக்கும் 27 மாவட்டங்கள். அந்த 27 மாவட்டங்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு உள்ளாட்சிப் பதவி இடங்களுக்கு இடஒதுக்கீடு விதி 6-னை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும். அங்கேயே இடஒதுக்கீடு கொண்டுவந்து, முறையாக நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இப்போதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்த அரசும் – அரசுடன் கூட்டணி வைத்துள்ள தேர்தல் ஆணையமும் கடைப்பிடித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற உண்மையான உள்ளாட்சி அமைப்புகள் அமைய, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் சக்தியை சந்திக்க தெம்பிருந்தால், திராணி இருந்தால் முறையாக அ.தி.மு.க. அரசு தேர்தலைச் சந்திக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் துணிச்சலாக, தெளிவாக இந்த தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளது.

செய்தியாளர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும் என சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளாரே?

கழகத் தலைவர்: நடத்தித்தானே ஆகவேண்டும்! நடத்தமாட்டேன் என்று சொல்கிறாரா?

தேர்தலை மட்டுமே தேர்தல் ஆணையம் நடத்தும். இடஒதுக்கீடு என்பது அரசு செய்ய வேண்டிய வேலை! அதை முறையாகச் செய்ய வேண்டும். அதை இந்த அரசு செய்யாததால்தான் இவ்வளவு குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

செய்தியாளர்: 9 மாவட்டங்களை விடுத்து தேர்தல் நடத்துவதால் ஏதேனும் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளதா?

கழகத் தலைவர்: நிச்சயம் குழப்பம் ஏற்படும்! தேர்தலை நிறுத்த தி.மு.க.,தான் முயற்சி செய்கிறது என அவர்கள் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்கு நீங்களும் துணை நிற்பதுதான் வேதனையாக உள்ளது. அதை நிறுத்துவதற்கான எல்லா அடிப்படைப் பிரச்சினைகளையும் அவர்கள் செய்துகொண்டு யாராவது நீதிமன்றத்துக்கு செல்வார்களா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அ.தி.மு.க.,வுக்கு இல்லை. காரணம் தோல்வி பயம்!

தி.மு.க.,வைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here