கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி (அண்ணா அறிவாலயம்)

0
434

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிந்து கொண்டு, அரசியல் சட்ட அமைப்பைக் காப்பாற்ற உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்திட வேண்டும்”

இதுவரையில் ‘ஊழல் ஆட்சி’ – ‘கொலைகார ஆட்சி’ – ‘கொள்ளைக்கார ஆட்சி’ என்று சொல்லக் கூடிய நிலையில் இருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது ‘தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாகவும்’ மாறியிருக்கிறது

உள்ளாட்சித் தேர்தலையொட்டி இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு; ஆனால் அதிகாரப்பூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்னவென்று இன்னும் வெளிவராத சூழ்நிலையில், ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த அடிப்படையில் சில கருத்துக்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வழக்கு தொடுத்த நிலையில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி இருந்தோம்.

அதை ஏற்றுக்கொண்டு இன்று சில அறிவிப்புகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. 2016ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடுத்த நேரத்தில் அப்போது அரசு செயலாளராக இருக்கக்கூடிய அன்ஸ்ராஜ் வர்மா அவர்கள் ஒரு பிரமாண வாக்குமூலத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 2016-ஆம் ஆண்டிற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது உச்சநீதி மன்றத்தில் அதை மாற்றி 2011-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை அடிப்படையில், 2016-ஆம் ஆண்டிற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் அவர் தவறாக சொல்லி இருக்கிறார்.

இந்த முரண்பாட்டை உச்சநீதிமன்றம் உணர்ந்து தெளிவாக என்ன சொல்லி இருக்கிறது என்றால், 2011-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் ‘டீலிமிட்டேஷன் கமிஷன்’ இடஒதுக்கீட்டை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் எனத் தெளிவாக சொல்லியிருக்கிறது.

தற்போதாவது மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் முழு விவரத்தை – அதன் உணர்வைத் தெளிவாக தெரிந்து கொண்டு அரசியல் சட்ட அமைப்பை காப்பாற்ற முறையாக இந்த தேர்தலை நடத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர்: இந்த தீர்ப்பு என்பது தி.மு.க.,வுக்கு கொடுத்த சம்மட்டி அடி என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

கழகத் தலைவர்: அது அரசியல் கோணத்தில் பேசி இருக்கிறார். முழுத் தீர்ப்பு விவரம் இன்னும் வரவில்லை; வந்த பிறகு பதில் சொல்கிறேன்.

சம்மட்டி அடி என்று சொன்ன அவருக்கு நான் சொல்ல விரும்புவது, ஏற்கனவே இதே உச்சநீதிமன்றத்தில் அவர்கள் அரசு தரப்பில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லியிருந்தார்கள்.

அதில் எந்த சிக்கலும் இல்லை; முறையாகத்தான் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அது இல்லை என்று உச்சநீதிமன்றம் உணர்ந்த காரணத்தினால் தான் அந்த ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று வழிகாட்டுதல் கொடுத்தது.

எங்களுக்கு சம்மட்டி அடி என்று சொல்கிறார்களே, அவர்களுக்கு கொடுத்தது ‘மரண அடி’ என்பதுதான் என்னுடைய பதில்!

செய்தியாளர்:  அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மக்களைச் சந்திப்பதற்கு திமுகவிற்கு திராணி இல்லை என்று கூறியிருக்கிறார். அதுகுறித்து உங்களுடைய கருத்து?

கழகத் தலைவர்: மக்களைச் சந்திப்பதற்கு தி.மு.க. என்றும் தயாராக இருக்கிறது; நாங்கள் ஓடி ஒளியவில்லை. தேர்தலை நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் எங்களுடைய கோரிக்கைகளில் இடம் பெறவில்லை.

உச்சநீதிமன்றமே தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்த வழக்கு வந்த போது உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்றால், தி.மு.க.,வைப் பொறுத்தவரைக்கும் தேர்தலை நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. இடஒதுக்கீடு, மறுவரையறை இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்திவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பிறகு ஜெயக்குமாருக்கு என்ன அறிவுரை சொல்வது என்பது தெரியவில்லை.

செய்தியாளர்:  குடியுரிமைச் சட்ட மசோதா குறித்து அதிமுகவுடைய நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கழகத் தலைவர்: கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும். ஓட்டெடுப்பு இன்னும் நிறைவடையவில்லை. நிறைவடைந்தவுடன் தெரிந்துவிடும்.

நேற்று நாடாளுமன்றத்தில் இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

எதிர்த்தது மட்டுமல்ல; அறிமுக நிலையிலேயே அதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.

ஆனால் இன்றைக்கு, தி.மு.க. ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை வெளிநடப்பு செய்து வந்து விட்டார்கள் என்று சித்தரித்து சில ஊடகங்கள் போட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு மறுபடியும் சென்று விவாதம் நடைபெற்ற போது எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் பங்கேற்று அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, துணிச்சலாக எல்லா பிரச்சினைகளையும் அங்கு பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இரவு 12 மணி வரைக்கும் விவாதம் நடந்திருக்கிறது. விவாதத்தில் முழுமையாக எங்களுடைய உறுப்பினர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டு, ஓட்டெடுப்பிலும் கலந்து கொண்டு அதை எதிர்த்து ஓட்டும் போட்டிருக்கிறார்கள்.  இதன்பிறகு நான் என்ன விளக்கம் சொல்ல வேண்டும்.

இப்பொழுது அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரையில் என்ன நிலை என்றால் இதை ஆதரித்து ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சார்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை ஆதரித்து பேசி இருக்கிறார்கள். ஆதரித்து பேசிய இந்த சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது, இந்த எடப்பாடி ஆட்சியை  இதுவரைக்கும் ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  இப்போது ‘தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆட்சியாகவும்’ இந்த எடப்பாடி ஆட்சி இருக்கிறது என்பதுதான் உண்மையான ஒன்று!

செய்தியாளர்: 2014 அதிமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் அகதி முகாமை இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வலியுறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததே?

கழகத் தலைவர்: எந்த தேர்தல் அறிக்கையாக இருந்தாலும் சரி; அது 110 விதியை பயன்படுத்தி சட்டமன்றத்தில் சொல்கிற உறுதிமொழியாக இருந்தாலும் சரி; எதையும் காப்பாற்றுகிற நிலையில் இந்த ஆட்சி இல்லை!

மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு எடுபுடியாக செயல்படுவதுதான் இவர்களுடைய இலட்சியமாக இருந்து கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here