ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

0
215

போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (22.02.2020) மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். எஸ்.டி.எப்.ஐ  பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் க.ஒச்சுக்காளை வரவேற்றார். சங்க வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு சமர்ப்பித்தார். வேலை அறிக்கையைச் சமர்ப்பித்ததும், சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கி பேசினார்

 கூட்டத்தில் 5, 8 வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பைத் தமிழக அரசு திரும்பப் பெற்றதற்கு வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 26.11.2018 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது 21 மாவட்டங்களில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாலும், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் பேரில் கல்வித்துறையால் வழங்கப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) ன் கீழான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

 மேலும், கடந்த 22. 01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு)

விதி 17(ஆ) ன் கீழான நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

 மேற்படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் 7500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்கால பலன்களைப் பெற முடியாமலும், பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற முடியாமலும் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி இயக்கத்தின் சார்பில் ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்களைச் சந்தித்து பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட 7500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறக்கோரி 26.04.2020 அன்று சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில அளவில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென மாநிலச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

 மேலும், தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசியக் கல்விக் கொள்கை – 2019 ஐ  திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 19.03.2020 அன்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (எஸ்.டி.எப்.ஐ ) உள்ளிட்ட தோழமைச் சங்கங்களின் சார்பில் புதுதில்லியில் நடைபெறும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here