அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட 2 குற்றவாளிகளை வெளிமாநிலம் சென்று கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

0
415

சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளூர் தெரு, எண்-373, என்ற முகவரியில் பிரபாகரன் வ/27, த/பெ. ஆனந்தன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதியில் ஓம் பிளாஸ்டிங் & கோட்டிங் என்ற பெயரில் இரும்பு வெல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்துள்ளார். கடந்த 22.11.2019 அன்று காலை 10.30 மணியளவில் பிரபாகரன் வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றதாகவும், மாலை 4.30 மணியளவில் இரும்பு பொருட்களை கொண்டு வருவதற்காக லாரி ஓட்டுனர் மேற்படி பிரபாகரனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்காததால் அவரது தந்தை ஆனந்தன் என்பவரை தொடர்பு கொண்டு உங்கள் மகன் போனை எடுக்கவில்லையென லாரி ஓட்டுனர் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆனந்தனும் பிரபாகரனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ஆனந்தன் இரவு 11.00 மணியளவில் மேற்படி கம்பெனிக்கு வந்து பார்த்தபோது கம்பெனி பூட்டியிருந்ததாகவும், கம்பெனியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மேற்படி பிரபாகரன் இடது பக்க தலை, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பிரபாகரனின் தந்தை ஆனந்தன் T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணையில், கொலை சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்படி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் மேற்படி பிரபாகரனை கொலை செய்துவிட்டு பீகார் மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. வெளிமாநிலத்திற்கு தப்பிச்சென்ற குற்றவாளிகளை பிடிக்க T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R.விஜயராகவன் தலைமையில் , T-1 அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.சையத்முபாரக், T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.P.சார்லஸ் (த.கா.36030), திரு.எம்.அன்பழகன் (த.கா.36120) திரு.P.சதீஷ் (த.கா.36369) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடந்த 24.11.2019 அன்று பீகார் மாநிலத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கடந்த 27.11.2019 அன்று பௌரித் கிராமத்தில் பதுங்கிருந்த ரவுசன்மாஞ்சி, வ/21, த/பெ.பல்கிசுன், கெவாலி கிராமம், நாளந்தா மாவட்டம், பீகார் மாநிலம் மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் என இருவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் கடந்த 22.11.2019 அன்று காலை 11.30 மணியளவில் கைது செய்யப்பட்ட ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் வேலைக்கு சேர்ந்த 4 நாட்களிலே வேலையைவிட்டு விட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி உரிமையாளர் பிரபாகரனிடம் சம்பள பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு பிராபகரன் வேலைக்கு சேர்ந்து நான்கு நாட்களில் எப்படி சம்பளத்தை தருவது தொடர்ந்து வேலை செய்யுங்கள் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று ஓய்வு எடுக்க சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் மதியம் சுமார் 1.30 மணியளவில் பிரபாகரன் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் அவரது அறைக்கு சென்று அருகில் கிடந்த இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கிவிட்டு அவரது பையிலிருந்த ரூ.4,600/- மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ரவுசன்மாஞ்சி சிறையிலும், சிறுவன் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.
சிறப்பாக புலனாய்வு செய்து மேற்படி ஆதாயகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை பீகார் மாநிலத்திற்கு சென்று கைது செய்த T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R..விஜயராகவன் தலைமையில் , T-1 அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.சையத் முபாரக், தலைமைக்காவலர்கள் திரு.P.சார்லஸ் (த.கா.36030), திரு.M.அன்பழகன் (த.கா.36120) திரு.P.சதீஷ் (த.கா.36369) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (2.12.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here